ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்பது எதிர்க்கட்சிகளின் கற்பனை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் யோசனை ஊடாக ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சூழ்ச்சி செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி எதிர்க்கட்சிகள் உருவாக்கிய கற்பனை கதை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பல் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்கு குறுகிய வழிகள் எதுவுமில்லை. அது நீண்ட செயற்பாடு எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஜனாதிபதி,அந்த தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்கும் யோசனையின் போர்வையில், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் சூழ்ச்சிகள் நடந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவான நிலைப்பாடுகள் இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இதன் காரணமாக அரசாங்கம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

ஆனால், அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எந்த காரணத்தை கொண்டும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்பது அவரது கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படும் என்பதுடன் அடுத்தாண்டு பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபை தேர்தல் என்பன நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin