தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருக்காவிட்டால், UPI பணம் செலுத்த முறைக்கு எதிராக நாட்டுக்குள் மிகப் பெரிய எதிர்ப்பு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்ததாகவும் இந்த விஜயத்துடன் இதுவரை இருந்து வந்த இந்திய எதிர்ப்பு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையானது கொள்கைகள் நிரந்தரமல்ல என்பதற்கு சிறந்த உதாரணம் எனவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமை்சசர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பொது மைதானத்தில் நடைபெறும் “ஜயகமு ஸ்ரீலங்கா” நிகழ்ச்சியில் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17) கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் இந்திய எதிர்ப்பு கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை சாதகமான விடயம். இந்த கொள்கை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அந்த உயிர்கள் கிடைக்காது என்பது மிகவும் கவலைக்குரிய வரலாறு.
இதனால், எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியாவின் அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்வதில் தடைகள் ஏற்படாது என நம்புகிறோம்.
இதன் மூலம் இந்தியா, இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கொள்கைகளுக்கு வாக்களித்தே எமது நாடு இந்த நிலைமைக்கு வந்துள்ளது. எனினும் நாட்டுக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய, மக்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும் கொள்கைகளுக்கான நான் குரல் கொடுப்பேன்.
இந்த நிலையில், நாட்டின் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளக்கூடிய தலைமைத்துவத்திற்காக குரல் கொடுத்து வருகின்றேன்.
கொள்கைகள் மாறும் என்பதற்கு சிகப்பு சகோதரர்கள் இந்தியாவுக்கு எதிராக கொண்டிருந்த கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளமை சிறந்த உதாரணம்.
சிகப்பு சகோதரர்களின் 5 வகுப்புகளில் ஒரு வகுப்பு இந்திய பரவல்வாதத்திற்கு எதிரானது.
இந்திய பரவல்வாதம் என்று விரிவுரைகளை நடத்தி, மக்களை குருடர்களாக மாற்றி, ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்தவர்கள் தமது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளனர்.
அது சிறந்தது. எனினும் குருடாக்கப்பட்டு அழிக்கப்பட்ட உயிர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.
எனினும் தற்போது அந்த கொள்கைகளை மாற்றிக்கொண்டுள்ளனர். சிகப்பு சகோதரர்கள் இந்தியாவுக்கு செல்லாமல் இருந்திருந்தால், இந்திய பண கொடுக்கல்,வாங்கல் முறையான UPI முறையை ஜனாதிபதி தலையிட்டு இலங்கையில் அறிமுகப்படுத்தும் போது, நாட்டை இந்தியாவுக்கு விற்பனை செய்து விட்டனர் என்று கூறியிருப்பார்கள்.
இந்தியாவுக்கு சென்றதால் அமைதியாக இருந்து விட்டனர். கடந்த காலங்களில் கூறிய கதைகள் நினைவில் இருக்கின்றன.
அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்திய போது கூறிய கதைகள். அமுல் பால் மா நிறுவனம் பற்றி கூறிய பொய் கதைகள் நினைவுக்கு வருகின்றன.
இந்த கதைகள் தொடர்பில் தற்போது பதிலளிக்கும் போது அழகான பதில்களை வழங்குகின்றனர். விலை மனு கோரி வழங்கினால் பரவாயில்லை என்று தற்போது கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு சென்றாவது கொள்கைகளை மாற்றிக்கொண்டமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.