நாம் தொடர்ந்தும் கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம்.இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் 76வது ஆண்டு விழா. சுகததாச உள்ளக அரங்களில் இன்று (6) இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
இளம் சமுதாயத்தின் போராட்டம்
ஆயுதம் ஏந்தாமல், வெடிகுண்டை கையில் எடுக்காமல் முதல் தடவையாக இளம் சமுதாயம் ஒரு போராட்டத்தை நடத்தி, மாற்றம் வேண்டும் என வலியுறுத்தினர். அதனை நாம் ஏற்றுக்கொண்டோம்.
எனினும், அதற்குள் கிளர்ச்சியை உருவாக்கி போராட்டத்தை ஒரு சிலர் நாசமாக்கினர். சரியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் திசை மாறியது. இப்போது போராட்டம் இல்லை என்றாலும் இளைஞர்களின் நோக்கம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.
நாட்டின் பிரதான வேலைத்திட்டங்களை அரசியலுக்கு அப்பால் கொண்டு சென்று செய்து முடிப்போம். மாற்றம் ஒன்று வேண்டும் என கேட்கின்ற இந்த நிலையில் சகலரையும் இணைத்துக்கொண்டு இந்த மாற்றத்தை உருவாக்குவோம்.
நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். பலரது உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை நான் செய்து முடிப்பேன்.
எரிபொருள் பிரச்சினை
அடுத்த பெரும்போகத்தில் உரம், எரிபொருள் என சகலத்தையும் நாம் பெற்றுக்கொடுப்போம். அதற்கான இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டுள்ளோம். தொடர்ந்தும் எம்மால் பிச்சை எடுத்து உண்ண முடியாது, எம்மால் கடன்களில் தொடர்ந்தும் வாழ முடியாது.
நாம் எவருமே வங்குரோத்து நிலைக்கு மாற விரும்புவதில்லை. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம். கடன் இல்லாத நாட்டை உருவாக்குவோம்.
புதிய பொருளாதார கொள்கை
புதிய பொருளாதார கொள்கையை வகுப்போம். மாற்று வழிமுறைகளை தேடுவோம். அதன் மூலமாக பலமடைவோம். புதிய பயணத்தை ஆரம்பிப்போம். ஜப்பானுக்கு முடியும் என்றால், சிங்கப்பூருக்கு முடியும் என்றால், கொரியாவுக்கு முடியும் என்றால், டுபாய்க்கு முடியும் என்றால் ஏன் எம்மால் முடியாது.
2020-2025 ஆண்டுக்குள் பலமான வளமான நாட்டை உருவாக்குவோம். அடுத்த ஆண்டே அதனை நோக்கி பயணிப்போம். இதன் இறுதியை பார்க்க நான் இருக்க மாட்டேன், ஆனால் இன்றைய இளம் சமுதாயம் வளமக வாழும் சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
எமது கொள்கையை உறுதியாக முன்கொண்டு செல்வோம். ஐக்கிய மக்கள் சக்தியாக இருந்தாலும் , பொதுஜன முன்னணியானாலும்,.ஜே.வி,பியானாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பென்றாலும் ஏனைய சகல கட்சிகளாக சுயாதீன அமைப்புகளாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்.
நாம் அனைவரும் ஒன்றிணைவோம் . ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுப்போம். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் சகலரும் ஒன்றிணைந்து அச்சமின்றி இந்த பயணத்தை ஆரம்பிப்போம். முதல் போராட்டம் முடிந்துவிட்டது, நாட்டை ஒன்றிணைக்கும் இரண்டாம் போராட்டத்தை இன்றில் இருந்து ஆரம்பிப்பேன்.
ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான நான்காவது ஜனாதிபதியாக நான் உள்ளேன், ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமோ, நாடாளுமன்ற குழுவோ இல்லை என்ற சிறப்பம்சம் எனக்குண்டு. மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் மீதான நம்பிக்கையை வைத்து ஒன்று கூடிய சகல மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.