நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவை வெளியேற்றுவது குறித்த தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுந்த போது, அத்தகைய நடவடிக்கை சட்டபூர்வ நடைமுறைக்கு வழிவகுக்கும் என பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும், இறுதியில் சரத் பொன்சேகாவை தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் கட்சியின் தலைவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சரத் பொன்சேகாவின் நிலைப்பாடு தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைமைகள் குறித்து தொடர்ந்து பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் நடந்த கலந்துரையாடல், சரத் பொன்சேகா விரைவில் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என்ற யூகங்களுக்கு வழிவகுத்தது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரைவில் வெளியிடுவார் என்ற அறிவிப்பொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட இருந்த நிலையில், அதற்கு முன்னதாக கட்சியின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்து, அங்கத்துவத்தில் இருந்தும் விலகிக்கொள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம், சரத் பொன்சேகா தலைமையில் புதிய கட்சி ஒன்றும் அண்மையில் தொடங்கப்பட்டது. இதன்படி, நாட்டின் முன்னேற்றத்திற்கு கட்சி பேதமின்றி தேசிய வளர்ச்சிக் கொள்கைகளின்படி நடக்க வேண்டும் என சரத் பொன்சேகா அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த பின்னணியில், சரத் பொன்சேகா ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்கப்படுவாரா அல்லது தாமே நீங்கி தனித்து செயற்படுவாரா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.