உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்க விரும்புகிறேன்: பத்தும் நிஸ்ஸங்க

இலங்கை-ஆப்கானிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை 3:0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

பல வருட பின்னடைவின் பின்னர் இலங்கை பெற்ற இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது என்பது இரகசியமல்ல.

எவ்வாறெனினும், பத்தும் நிஸ்ஸங்கவின் சிறப்பான துடுப்பாட்டம் இந்த ஒருநாள் தொடரில் அதிகம் பேசப்பட்டுள்ளது.

பத்தும் நிஸ்ஸங்கவின் இரட்டை சதம்

ஆப்கானிஸ்தானுடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதன்மூலம், ஆடவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பத்தும் நிஸ்ஸங்க பெற்றார்.

குறித்த ஆட்டத்தில் அவர் பெற்றுக் கொண்ட 210 ஓட்டங்கள் ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்கான அதிகபட்ச தனிநபர் ஓட்டமாகும்.

இதனால் இலங்கையின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யாவின் 24 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது.

2000 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக ஜெயசூர்யா 189 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

பத்தும் நிஸ்ஸங்கவின் 210 ஓட்டம் என்பது ஒருநாள் போட்டிகளில் தனிநபர் ஒருவர் பெற்றுக் கொண்ட ஐந்தாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

அதேநேரம் ஒருநாள் அரங்கில் பதிவான 12 ஆவது இரட்டை சதம் இதுவாகும்.

மூன்றாவது போட்டியில் சதம்

நேற்று முடிவடைந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் பத்தும் நிஸ்ஸங்க சதம் அடித்துள்ளார்.

மொத்தமாக 101 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகள் அடங்கலாக 118 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் பத்தும் நிஸ்ஸங்க மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அதிகூடிய ஓட்டங்களை பெற்ற இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையினையும் பத்தும் நிஸ்ஸங்க படைத்தார்.

அவர் ஆப்கானிஸ்தானுடான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மொத்தம் 346 ஓட்டங்களை பெற்றார்.

இது உலகின் 4 ஆவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

இந்திய வீரர் சுப்மான் கில் 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னதாக 360 ஓட்டங்களை குவித்து முதலிடம் பிடித்திருந்தார்.

ஆப்கானுடனான தொடரில் சிறப்பாக செயற்பட்டதற்காக பத்தும் நிஸங்க தொடரின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

நாங்கள் ஒரு அணியாக சிறந்த இடத்தில் இருக்கிறோம்; நாங்கள் நிறைய நல்ல விஷயங்களை செய்தோம். பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு போன்ற சிறந்த சகலதுறை செயல்திறன் இருந்தது, இது தொடரை வெல்ல எங்களுக்கு உதவியது என பத்தும் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார்.

போட்டி மற்றும் தனது எதிர்காலம் குறித்து மேலும் உரையாற்றிய பத்தும் நிஸ்ஸங்க,

2024 ஆம் ஆண்டிற்கான இலக்கு

எனது அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதே எண்ணம். அதுதான் என் இலக்கு.

இரட்டை சதம் பற்றி

இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. என்னால் அதனை இவ்வளவு விரைவாக செய்ய முடியும் என்று நினைக்கவில்லை. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என் தவறுகளை குறைத்துக்கொண்டு முன்னேற விரும்புகிறேன்.

3 ஆவது போட்டி துடுப்பாட்ட வியூகம்

நாங்கள் முதல் பத்து ஓவர்களை துடுப்பாட்டம் செய்து அணிக்கு நல்ல தொடக்கத்தைப் பெற விரும்பினோம். நாங்கள் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர விரும்பினோம், நாங்கள் அதில் வெற்றி பெற்றோம்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பில்

நான் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகம் விரும்புகிறேன். அதில் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை இரு கைகளாலும் பிடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஜெர்சி எண் 18

எனது பிறந்த நாள் மே 18 ஆம் திகதி என்பதால் எண் 18 ஐ தேர்வு செய்தேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக இலக்கு

நான் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இருக்க விரும்புகிறேன். அதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.

ரசிகர்கள் பற்றி

நாங்கள் எங்கள் ரசிகர்களை நேசிக்கிறோம், எங்களுக்காக வந்து ஆதரவளித்ததற்கு அவர்களுக்கு நன்றி.

Recommended For You

About the Author: admin