இந்தியா மற்றும் மாலத்தீவு தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளை இருதரப்பு ரீதியாக தீர்த்துக்கொள்ளும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாலத்தீவு சீன ஆய்வு கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்துள்ள போதிலும் சீன துருப்புகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய துருப்புகள் நாடுதிரும்பல், சீன கப்பல் பிரவேசம், மாலத்தீவு அமைச்சர்களின் விமர்சனக் கருத்துகள் போன்றவற்றில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கு இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு டெல்லியோ மாலைத்தீவோ இலங்கையை அணுகவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் நலன் கருதி இந்தப் பிரச்சினைகள் விரைவில் குறையும் என இலங்கை நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நண்பர் மற்றும் அண்டை நாடு என்ற முறையில், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் பிரச்சினைகளை விரைவில் தீர்த்துக்கொள்ளுமென விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு ஒரு உள் செயல்முறை உள்ளது எனவும், இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அனைவருக்கும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என தாம் நினைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.