காணி உரிமையை வழங்குவதே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரைய மீது நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமையும் இன்று வெள்ளிக்கிழமையும் விவாதம் இடம்பெற்று வருகிறது.

அரசாங்கம் எதிர்காலத்தில் மேற்கொள்ள உள்ள பொருளாதார மறுசீரமைப்புகள், வரி திருத்தங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, தமது உரையில் விளக்கமளித்திருந்தார்.

நேற்றைய தினம் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், மக்கள் மீது தொடர்ந்து சுமைகளை ஏற்படுவத்துவதையே அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.

அதேபோன்று தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி தமது உரையில் எந்தவொரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை என தமிழரசுக் கட்சியின் சார்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இன்றைய அமர்வில் உரையாற்றிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் 20 இலட்சம் பேருக்கு காணி உரிமையை வழங்குவதாக கூறியிருந்தார். இதனை நாம் வரவேற்கிறோம்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை பொறுப்பேற்ற போது தற்காலிக தீர்வுக்கு பதிலாக நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுப்பது குறித்தே நாம் தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

அதற்காக ஏழு குழுக்களை சாம் உருவாக்கி இருந்தோம். வீடமைப்பு, காணி உரிமை, சுகாதாரம், கல்வி, சிறுவர்கள், பெண்களுக்கான பாதுகாப்பு உட்பட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

75 சதவீதமான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வை கண்டுவிட்டோம். அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்புதான் உள்ளது. வீடமைப்பு மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சில சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 14ஆயிரம் வீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 4ஆயிரம் வீடுகளை கட்டிமுடிக்க 10 வருடங்கள் சென்றுள்ளன.

10ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் முதல் கட்டமாக 1300 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளது. ‘செளமிய பூமி‘ என்ற பெயரில் எதிர்வரும் 19ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த 30 வருடத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்ப்பில் 44ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், மலையகத்தில் இரண்டு இலட்சத்தி 31ஆயிரம் குடும்பங்கள் முதல் இரண்டு இலட்சத்தி 51 ஆயிரம் வரையிலான குடும்பங்கள் வாழ்கின்றன. அதனால் இவர்களுக்கு காணி உரிமையை வழங்குவதே தீர்வாக அமையும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

ஒரு சமூகத்துக்கு காணி உரிமை என்பது அடிப்படைத் தேவையாகும். இதனை தானமாக நாம் கேட்வில்லை. உரிமையாக கேட்கிறோம். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை நாடுகடத்தியுள்ளனர்.

காணி உரிமையை கொடுப்பதில் கடுமையான எதிர்ப்புகள் உள்ளன. ஏனைய கட்சி தலைவர்களின் ஆதரவு எமக்கு அவசியமாகும். கம்பனிகளும் காணி உரிமை வழங்குவதை எதிர்கின்றனர்.

காணி உரிமை வழங்கினால் மக்கள் தோட்டத்தில் பணிப்புரிவார்களா எனத் தெரியவில்லை என கம்பனிகள் தெரிவிக்கின்றன.

மக்களை மாடுகளாக நடத்துவதே இதற்கு காரணம். அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதையை வழங்கவில்லை என்பதாலேயே மக்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனால் அவர்களுக்கு காணி உரிமையை வழங்கி உரிய கௌரவத்தை அளித்தால் இத்துறையை பாதுகாத்துக்கொள்ள முடியும்.‘‘ என்றார்.

இன்று உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

”இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அனுபவிக்கும் துன்பங்களையும் எதிர்காலத்தில் அனுபவிக்க போகின்ற நன்மைகளையும் தமது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபங்களை நோக்கமாக கொண்டதாக ஜனாதிபதியின் உரை இருக்கவில்லை. மாறாக அனைவரும் ஒன்றுபட்டு நாட்டை முன்னேற்ற வேண்டுமென்ற அழைப்பையே விடுத்துள்ளார்.

“நமக்கு நாமே விளக்குகள் ஆவோம்“ என்ற புத்த பெருமானின் போதனையில் ஆரம்பித்து மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை இணைத்து அவர் தமது கொள்கை விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார்.

புறநானூற்றில் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருபவன் நான். நான் என்பதை நாம் என மாற்றிவிட முடியுமானால் நாட்டில் உள்ள அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டுவிட முடியும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எவரும் செயல்பட்டால் அதன் ஊடாக நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்பட போவதில்லை.

நாம் இன்னமும் பொருளதார வீழ்ச்சியில் இருந்து மீண்டெழவில்லை. மீண்டெழும் போது, சில வலிகளையும் வேதனைகளையும் அனுபவிக்க நேரிடும். ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை விரைவான மீட்சிப்பாதைக்கு திரும்பும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin