மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகள் உட்பட அனைத்து இலத்திரனியல் அட்டைகளையும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலனி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான அனைத்து பண கொடுப்பனவுகளையும் இலத்திரனியல் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (05) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அட்டை மூலம் பணம் செலுத்தலாம்
நவீன இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டதாலும், பணத்தை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தாலும் தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
சேவையைப் பெறும் போது உங்களிடம் பணம் இல்லாவிட்டாலும் அட்டை மூலம் பணம் செலுத்தலாம். திறைசேரிக்கு வருவாயை ஈட்டும் ஒரு பெரிய நிறுவனமாக, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மாதாந்தம் சுமார் 1 பில்லியன் ரூபா வழங்குகிறது.
கோவிட் தொற்றுநோய் நிலைமை மற்றும் வாகன இறக்குமதி குறைவினால், வருமானம் சமீப காலமாக குறைந்துள்ளது, ஆனால் தற்போது அது மீண்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சுசந்த ஜயதிலக, கணக்காளர் அரவிந்த சமரகோன் மற்றும் மக்கள் குழுவினர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.