ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஷாநாயக்கவை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பாக கொழும்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் பலத்த முரண்பாடு தோன்றியுள்ளது.
பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி விசனமடைந்து உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது.
புது டில்லியுடன் தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொள்ள சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுப்பதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐனாதிபதி தேர்தல் நெருங்கும் நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் பிரதான அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி வரும் நிலையில், ஜே.வி.பியை முக்கியத்துவப்படுத்தும் நகர்வுகளில் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
இதே போன்று மற்றொரு வல்லரசு நாடான சீனா புவிசார் அரசியல் நோக்கில், ஜே.வி.பியுடன் அனுகுகின்றதா? அல்லது சீனாவின் செல்வாக்கை மேலும் பெறுவதற்காக ஜே.வி.பி இந்தியாவுடன் நெருக்கம் போன்ற தோற்றப்பாடுகளை காண்பிக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் ஒன்றினைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுப்படுகின்றதா? அல்லது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க பரிந்துரைத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு அமெரிக்கா அச்சத்தினை ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வியும் கொழும்பு அரசியல் பரப்பில் எழுகின்றது.
திருகோணமலையை மையப்படுத்திய ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையை ஏற்று கொண்டால் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க முடியும் என்று அமெரிக்காவின் தெற்காசிய வலயங்களுக்கு பொறுப்பான இராஜதந்திரி தொலைபேசி உரையாடலில் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கையின் பொருளாதார பலவீனங்களும் 2009க்கு பின்னரான சூழலில் நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்தாமையுமே இந்நிலைக்கு காரணம்.
வல்லரசு நாடுகளின் போட்டிகள் இலங்கைத்தீவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தங்கள் செயற்பாடுகளில் அனுகுமுறைகளை மாற்றி வருகின்றது.
அதேவேளை, தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் எவ்விதமான அனுகுமுறைகளும் இன்றி, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வல்லரசு நாடுகளின் அறிவுறுதலுக்கு காத்திருப்பது போல தெரிகின்றது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை செயல் இழக்க செய்யும் வியூகத்துக்காக அமெரிக்க இந்திய அரசியல் வகுக்கும் சூழ்ச்சியின் தாக்கத்தினை தற்போது உணர ஆரம்பித்து இருக்கும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் நீண்ட கால இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தால் இந்த அழுத்தங்களை தவிர்க்க முடியும் என்பதையும் உணரத்தலைப்பட வேண்டும்.