பொதுப் போக்குவரத்துகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் நேற்றைய (07) தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், பொது போக்குவரத்துக்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை கையாள்வதற்காக பொலிஸாரினால் இன்று (08) முதல் நாடளாவிய ரீதியில் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளிலும் சிவில் உடையில் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 90 வீதமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பொது போக்குவரத்து சேவைகளில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், தொந்தரவுகள், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவிக்கின்றது.
இவ்வாறு துன்புறுத்தல்களை எதிர்கொள்பவர்களில் வெறும் 4 வீதமானவர்கள் மாத்திரமே இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பொதுப் போக்குவரத்துகளில் தனி இருக்கை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல வருடங்களுக்கு முன்னதாக வலுப்பெற்றது.
பேருந்துகளில் பெண்களுக்கு தனியான இருக்கை
பேருந்துகளில் பெண்களுக்கு தனியான ஆசனங்களை ஒதுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அப்போதைய போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடம் காத்தான்குடி நகரசபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான திருமதி ஸல்மா ஹம்சா இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்திருந்து பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்கள் பல அசௌகரியங்களை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பாலியல் சேட்டைகளுக்கும் ஆளாகிறார்கள்.
இதனைத் தடுக்கவும் பெண்கள் அச்சமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கும் இந்த நடைமுறை அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், இந்த செயற்றிட்டம் வெறும் பேச்சளவில் நின்றுபோனது.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலான சட்டம்
பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், அதற்கான இறுக்கமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்ற போதும், இலங்கையில் ஏற்கனவே பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலான சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன.
1883 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட இலங்கை தண்டனைச் சட்டக் கோவையே (Penal Code) இன்று வரை எமது நாட்டின் குற்றவியல் சட்டத்தில் பெரும் பங்குவகிக்கின்றது.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பில் ஏற்புடைய சட்டங்கள் என பார்க்கும்போது தண்டனைச் சட்டக்கோவையானது 1995ஆம் ஆண்டில் 22ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டு புதிதாக சட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட பெண்களுக்கெதிரான சகலவிதமான பாரபட்டசங்களையும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச சமவாயத்தில் (Convention Elimination of All forms of Violence Against Women – CEDAW) இலங்கை 1981ஆம் ஆண்டு கைச்சாத்திட்டதும் காலப்போக்கில் CEDAW கமிட்டியின் பரிந்துரைகளும் காரணமாகும்.
இதன்படி 1995 ஆம் ஆண்டில் 22 ஆம் இலக்க சட்டத்தால் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் ஏற்கனவே குற்றமாக குறிப்பிடப்படாத விடயங்கள் சில தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டன.
பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
சட்டத்தின்படி பாதிக்கப்பட்டவரின் கதையை ஒப்புறுதிப்படுத்துதல் ஒரு தேவைப்பாடாக இல்லை. ஆனாலும், நீதிமன்றம் பாதிக்கப்பட்டவரின் ஒப்புறுதிப்படுத்தாத சான்றின் மீது ஒருவர் தீர்ப்பளிக்கக் கூடாது எனும் விதியை கையாண்டு வருகின்றது.
ஆகவே, பாதிக்கப்பட்டவரின் கதைக்கு எப்போதும் ஆதாரமாக பிற சான்றுளும் தேவைப்படுகின்றன. இதற்காகவே பொலிஸ் நிலையங்களில் பெண்கள் பிரிவொன்று (Women’s Desk) அமைக்கப்பட்டுள்ளது. ஆயினும் நடைமுறையில் பாதிக்கப்பட்டவர் அலுவலர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
பாலியல் துஷ்பிரயோக குற்றத்தைப் பொறுத்தவரை சட்ட வைத்தியச் சான்று (Medical Legal Report – MLR) கட்டாயத் தேவையாக உள்ளது. (நகர்ப்புற வைத்தியசாலைகளில் மட்டுமே வசதிகள் உள்ளது) நீதவான் முன்னிலையிலான விசாரணையில் பொலிஸார் தமது குறைந்த சட்டத்திறனுடன் அனுபவம் மிக்க எதிர்தரப்பு சட்டத்தரணிகளுடன் விவாதிக்க வேண்டியுள்ளது.
வழக்கு விசாரண காலதாமதம் அடைதல், பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுதல், சட்டத்தையும் நீதியையும் பெறுவதற்கான உற்சாகத்தை இழத்தல் போன்ற சிக்கல்கள் காணப்படுகின்றன.
இதனாலேயே பெரும்பாலான வழக்குகள் 10-15 வருடங்களுக்கு இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன. சில வழக்குகள் சரியான சாட்சியங்கள் இன்றி தள்ளுபடி செய்யப்படுகின்றன. சிலர் தாங்கலாகவே வழக்குகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.