எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை வலுவான அடித்தளத்தின் ஊடாக வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சட்டத்தரணி சிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
சமூக, பொருளாதார, அரசியல் போன்ற பல நெருக்கடிகளுக்குள் நாடு வீழ்ந்துள்ள சந்தர்ப்பத்தில் சமூகமும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது.
அவற்றில் இருந்து சமூகத்தை மீட்கும், வலுவான மற்றும் ஸ்திரமான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய அரசியல்வாதியாக சம்பிக்க ரணவக்க இருக்கின்றார்.
இதனால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்தும் பின்னணி உருவாகும் என்பதுடன் அவர் போட்டியிட வேண்டும் என்ற மக்கள் நிலைப்பாடும், கோரிக்கையும் இருக்கின்றது.
தற்போதைய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர்,அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில், சம்பிக்க ரணவக்கவை எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழும். எனினும் அவர் வலுவான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்படுவார்.
சட்டரீதியாக செயற்படும்,கொள்ளையடிக்காத, நம்பிக்கையான நபருக்கே இலங்கையை தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்க முடியும்.
இதற்கான சகல தகுதிகளும் இருக்கும் சம்பிக்க ரணவக்கவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் நடவடிக்கையானது மக்களின் விருப்பம் மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் நடக்கும் எனவும் சிரால் லக்திலக்க மேலும் தெரிவித்துள்ளார்.