சாந்தனை நாட்டுக்குக் கொண்டு வரப்போவது யார்?

சாந்தன் இலங்கை வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி சிறீதரனுக்கும் மனோ கணேசனுக்கும் கூறியுள்ளார். நேற்று, சனிக்கிழமை நடந்த சந்திப்பில் மேற்கண்டவாறு ரணில் தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க அரசியலின் மூலமே இது சாத்தியமாகியது என்று ஈ. பி.டி.பி யின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாந்தனின் தாயார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தார். சாந்தனை இலங்கைக்கு கொண்டுவர தான் நடவடிக்கை எடுப்பதாக தேவானந்தா சாந்தனின் தாயாருக்கு உறுதி கூறியுள்ளார்.

சாந்தனை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவுமாறு அவருடைய குடும்பத்தவர்கள் முதலில் அணுகியது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளைத்தான்.

இந்திய உச்ச நீதிமன்றத்தால் சாந்தன் விடுதலை செய்யப்பட்ட பின் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன்பு இக்கோரிக்கையை முன்வைத்து சாந்தனின் குடும்பத்தவர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்வாதிகளோடு பேசினார்கள்.

ஆனால் யாரும் பயன் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. கடந்த சில வாரங்களாக சாந்தன் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதனால் அவரை நாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவருடைய குடும்பத்தவர்கள் மீண்டும் அரசியல்வாதிகளை அணுகத் தொடங்கினார்கள்.

சாந்தனை நாட்டுக்கு கொண்டு வருவதில் உள்ள பிரச்சனைகள் எவை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அனைவரும் முப்பது ஆண்டுகளின் பின் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள். அவ்வாறு விடுவிக்கப்பட்ட இந்தியத் தமிழர்கள் தமது வீடுகளுக்கு சென்று விட்டார்கள்.

ஆனால், விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தொடர்ந்தும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்குக் கூறப்பட்ட காரணம் என்னவென்றால் அது போன்ற பாரதூரமான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விடுதலை அல்லது மன்னிப்பு வழங்கப்பட்ட பின் அவர்கள் இந்திய மண்ணில் தொடர்ந்தும் தரித்திருப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாகும்.

விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது நாட்டுக்குத் திரும்பி அனுப்பப்பட வேண்டும். எனினும் அதில் சாதனைத் தவிர ஏனைய மூவரும் நாட்டுக்கு திரும்பிவர விரும்பவில்லை.

அவர்களுடைய உறவினர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதால் அந்தந்த புலம்பெயர்ந்த நாடுகளுக்குத் தாமும் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்கள்.

ஆனால் இந்தியச் சட்டங்களின்படி அவர்களை அவ்வாறு அவர்களுடைய சொந்த நாடு அல்லாத ஏனைய நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே சாந்தன் உட்பட அனைவரும் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமில் கடந்த 15 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்புதிய சிறப்பு முகாமானது இதற்கு முன்பு அவர்கள் வைக்கப்பட்டிருந்த சிறப்பு முகாமுடன் ஒப்பிடுகையில் வசதிகள் குறைவானது. அங்கே ஒரு சிறிய அறைக்குள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

15க்கும் குறையாத காவலர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறையோடு கழிப்பறையும் குளியலறையும் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே அவர்கள் அறையை விட்டு வெளியே வருவதற்கான தேவைகள் குறைவு. அதற்கு முன் இருந்த சிறப்பு முகாமில் அவர்கள் காலை 6 மணிக்கு வெளியே வந்தால் மாலை 6:00 மணி வரையிலும் நடந்து திரியலாம்.

உடற்பயிற்சி செய்யலாம் நூலகத்திற்கு செல்லலாம், பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். ஆனால் புதிய முகாமில் அந்தளவு வசதிகள் இருக்கவில்லை அது ஒரு புதிய வகைத் தண்டனையாக அவர்களுக்கு அமைந்தது.

ஏற்கனவே நோய் வாய்ப்பட்டிருந்த சாந்தன் இப்பொழுது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் அளவுக்கு நோயாளி ஆகிவிட்டார்.

சிறைவைக்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலும் அவருடைய தாயார் அவரைப் பார்க்கவில்லை.

முதிய தாயார் விமானத்தில் பயணிக்க முடியாத அளவுக்கு ஆஸ்துமா நோயாளியாக இருக்கிறார். சாந்தன் நாடு திரும்ப விரும்புகிறார்.

தனது குடும்பத்தவர்களோடு தனது மிஞ்சிய காலத்தை கழிப்பதற்கு விரும்புகிறார். சிறையில் அவர் ஏறக்குறைய ஓர் ஆன்மீகவாதி போலாகி விட்டார் என்று அவருடைய வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆன்மீக விடயங்களையே அவர் அதிகம் கதைப்பதாகவும் பற்றற்றவர் போல அவர் நடந்து கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

நாட்டுக்குத் திரும்பி தன் தாய் சகோதரர்களோடு அவர் வாழ விரும்புவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அவர் நாடு திரும்பினால் இலங்கையில் அவர் பாதுகாப்பாக இருக்கலாமா என்ற சந்தேகம் தமிழகத்தில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு உண்டு.

இந்திய உச்ச நீதிமன்றம் சாந்தனும் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்தபின், அவர்கள் நாட்டுக்குத் திரும்பினால் என்ன நடக்கும் என்ற கேள்வி அவருக்காக வாதாடிய தமிழக வழக்கறிஞர்களிடம் இருந்தது.

இக்கேள்வியை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பி சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இருந்து உத்தியோகபூர்வ பதில் ஒன்றை பெற்றுக் கொள்வது நல்லது என்றும் யோசிக்கப்பட்டது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக் கேள்வியை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில், இது விடயத்தில் முடிவெடுக்க வேண்டியது இலங்கை அரசாங்கம்தான். இலங்கைத் தீவின் வெளி விவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சுந்தான்.

எனவே, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்க வேண்டியதும் இலங்கை அரசாங்கத்தின் மீது நிர்பந்தங்களை பிரயோகித்திருக்க வேண்டியதும் நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான்.

இந்த அடிப்படையில் சாந்தனின் குடும்பத்தவர்கள் நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடியிருக்கிறார்கள்.

சில அரசியல் செயற்பாட்டாளர்கள் விக்னேஸ்வரனும் உட்பட தமிழ் மக்கள் பிரதிநிதிகளோடு இதுதொடர்பாக உரையாடியிருக்கிறார்கள்.

யாருமே அதுதொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியது, அறிக்கை விட்டது, சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரைச் சந்தித்து ஆறுதல் கூறியது, என்பவற்றிற்கும் அப்பால் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகள் இருக்கவில்லை.

சாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய தாயாரோடு உரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமந்திரன் ஒருவர்.

அதன்பின் அவர் அது தொடர்பாக ஜனாதிபதியோடு பேசியதாகவும், ஆனால் ஜனாதிபதி தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய விளைவுகளையிட்டுப் பயப்பட்டதாகவும் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவருடைய பத்திரிகையில் எழுதியுள்ளார்.

இப்பொழுது சாந்தன் நோயாளியாகி விட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தவர்கள் விவகாரத்தை மீண்டும் -15 மாதங்களின் பின்- தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருக்கிறார்கள்.

தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் சிறீதரன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியதாகத் தகவல்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் இந்திய துணை தூதரகத்திற்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், கடிதத்துக்கு இந்திய துணைத் தூதரகம் பதிலளித்திருப்பதாகவும் ஒரு தகவல்.

சாந்தனை நாட்டுக்குள் அனுமதிக்கும் முடிவை எடுக்க வேண்டியது யார்? இந்திய மத்திய அரசா? அல்லது தமிழக முதல்வரா? அல்லது இலங்கை அரசாங்கமா?

இலங்கைத் தீவின் வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும்தான் அது தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும்.

சாந்தனை நாட்டுக்குள் வர விடுவது என்ற முடிவை வெளிவிவகார அமைச்சு எடுக்குமாக இருந்தால் அதற்கு வேண்டிய தற்காலிக பயண ஆவணங்களைக் கொடுக்குமாறு சென்னையில் உள்ள இலங்கை உப தூதரகத்திற்கு உத்தரவுகளை வழங்கலாம்.

சாந்தன் அல்லாத ஏனைய மூவரின் விடயத்தில் இந்திய மத்திய அரசு முடிவெடுக்க வேண்டியுள்ளது. அவர்களை புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்ல அனுமதிப்பதா இல்லையா என்று.

ஆனால் சாந்தனின் விடயத்தில் முடிவு இலங்கை அரசாங்கத்தின் கையில்தான் உண்டு. எனவே அதற்கு வேண்டிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியது நாட்டில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் குடிமக்கள் சமூகங்களும்தான்.

யாருக்கு கடிதம் எழுத வேண்டுமோ, யாருடன் நேரடியாகப் பேச வேண்டுமோ அவர்களோடு உரையாடியிருந்திருக்க வேண்டும்.

முடிவில், சலித்துப் போன சாந்தனின் தாயார், கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அணுகியதாகத் தெரிகிறது.

தேவானந்தா நீதி அமைச்சரோடு அதுபற்றி உரையாடியதாகக் கூறப்படுகிறது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் ராமநாதனும் இந்த விடயத்தில் அக்கறை காட்டியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் சிறீதரன் வெளிவிவகார அமைச்சரோடு தொலை பேசியில் உரையாடியதாக ஒரு தகவல்.

அதாவது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மட்டுமன்றி அதற்கு வெளியே நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சாந்தனின் விடயத்தில் அக்கறை காட்டியிருப்பதாகத் தெரிகிறது.

கடந்த 15 மாதங்களாக சாந்தனின் குடும்பத்தவர்களுக்குத் திருப்தியான ஒரு பதிலைக் கொடுக்க தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட அரசியல்வாதிகளால் முடியவில்லை.

அதாவது சாந்தனின் விடயத்தில் அவர்கள் மந்தமாகவே இயங்கியிருக்கிறார்கள். அது தமிழ்த் தேசிய அரசியலின் மந்தத் தனத்தையும் கையாலாகாத் தனத்தையும் காட்டுகின்றதா?

Recommended For You

About the Author: admin