அதிகாரத்தில் இருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறிவிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியில் இருந்த போது ஜனாநாயகம் குறித்து பேசினார். தமிழ் மக்களுக்கான தீர்வு, ஊடகச் சுதந்திரம் குறித்தெல்லாம் பேசினார்.
ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய போது குரல் கொடுத்தவர் இன்று நிகழ்நிலைச் சட்டம் ஒன்றைக் கொணர்ந்து அனைத்து ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, எரிபொருள் விலை சூத்திரம் குறித்து மக்களுக்கு போதிய தெளிவில்லாமல் இருக்கின்றது. மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க வேண்டிய காலப்பகுதியில் அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் நட்டத்தில் இயங்குவதாலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்வதால் ஐஓசி மற்றும் சினோபெக் போன்ற நிறுவனங்கள் பாரிய இலாபத்தை பெற்றுக்கொள்கின்றன.
இது குறித்து அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிற்கு பல முன்மொழிவுகளை வைத்துள்ளோம். ஆனால் அதிகார மோகத்தில் அவர் எவருடைய பேச்சையும் கேட்பதில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.