அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு கூடுதல் சலுகைகள்

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸாருக்கான சம்பள முறைமை மற்றும் 55 வயது வரை பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் இந்தக் குழு கூடிய போது, இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவிடம், தாங்கள் சேவையில் இருந்திருந்தால் பெறக்கூடிய பதவி உயர்வு தொடர்பான பட்டத்தையும் அதற்குரிய சம்பளத்துடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் சிறப்புப் பணி மற்றும் இடர்பாடு அடிப்படையில் வழங்கப்படும் உதவித்தொகை, சிறப்புப் பிரிவுகளில் பணியாற்றாத அதிகாரிகளுக்கும் வழங்கப்படுவதாக இங்கு தகவல் வெளியாகியுள்ளது.

தவறான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற ஓய்வுபெற்ற ஊனமுற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாத காலத்துக்குள் அறிக்கை வழங்குமாறு துறைசார் கண்காணிப்புக் குழு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அங்கவீனமுற்ற பொலிஸாருக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலிஸ் வைத்தியசாலையில் தனியான கவுண்டர் ஒன்றைத் திறக்குமாறு, மேற்பார்வைக்குழுவின் தலைவர் சரத் வீரசேகர எம்.பி, பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin