தமிழர் மரபு மாதத்தை கொண்டாடும் வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி எப்போதும் போல் மழுப்பலாகவே காணப்படுகிறது. சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் வெளியிட்டுள்ள கட்டுரையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடா சுமார் 237,000 இற்கும் மேற்பட்ட தமிழர்களை தன்னகத்தே கொண்ட ஒரு நாடு. இந்த தொகையானது உலகளவில் மிகப்பாரிய தமிழ் புலம்பெயர்ந்தோரை குறிக்கின்றது.
இதன் விளைவாக யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில், உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சமாதானத்தை முன்னுரிமைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிப்பதில் கனேடிய அரசாங்கத்திற்கு பாரிய பங்குள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, லெப்டினன் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகோயோருக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கனேடிய அரசாங்கம் துணிகரமான நடவடிக்கையினை எடுத்திருந்தது.
இலங்கை ஆயுதப் போரின் போது மனித உரிமைகள் கடுமையாகவும் முறையற்ற வகையிலும் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த நால்வருக்கும் தடை விதித்தது.
இதன்படி, இவர்கள் தற்போது கனடாவுக்கு செல்வதற்கும், கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதற்கும், வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் துரதிர்ஷ்டவசமாக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பெயர் சேர்த்துக்கொள்ளப்படாமல் போயுள்ளது. இலங்கையில் 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் இறுதிக்கட்ட போரின்போது முக்கிய தரைப்படை தளபதியாக இவரே இருந்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் 2015 ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையில் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத் தடை விதித்தது.
மேலும், சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் சவேந்திர சில்வாவுக்கு எதிரான கடந்த வருடம் விரிவான ஆதாரங்களுடன் கூடிய ஆவணத்தை கனேடிய பொருளாதாரத் தடை அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளது.
சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் 58 ஆவது பிரிவு சர்வதேச மனித உரிமை மீறல்களிலும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் கடுமையான மீறல்களிலும் ஈடுபட்டதை இந்த ஆவணம் வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி, கனடா பொருளாதாரத் தடையினை விதித்து ஒரு வருடமாகியுள்ள நிலையில், போரின் போது இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு பொறுப்புக் கூறுவதில் இலங்கையில் வெளிப்படையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே தீர்வு என இலங்கை அரசாங்கத்திற்கு வலுவான செய்தியை கூறும் பொறுப்பு கனடாவுக்கு தற்போதும் இருக்கின்றது.