மாலத்தீவுக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கும் (BIA) இடையிலான “ஏர் அம்புலன்ஸ்” சேவை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மாலைத்தீவு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கேப்டன் மொஹமட் அமீன் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் இன்று அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான
ஏர் அம்புலன்ஸ் சேவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விபத்துக்கள், நோய்கள் மற்றும் பிற சுகாதார அவசர நிலைகளில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக மாலத்தீவு பிரஜைகள் உடனடியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்த சேவை உதவும்.
முன்னதாக, மாலைத்தீவு பிரஜைகள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், இலங்கையில் அவசர சிகிச்சையின் தரத்தை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அத்தகைய நோயாளிகளை இலங்கை வைத்தியசாலைகளுக்கு அனுப்ப மாலைத்தீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று மாலைத்தீவு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டினார்.