நாட்டை கட்டியெழுப்பும் போது வடக்கு மக்களை அதிகார பரவலாக்கல் தொடர்பான தீர்வு குறித்து கூறி அழைக்கக்கூடாது எனவும் நாட்டில் நிலவும் பேரிடரில் இருந்து மீள ஒன்றாக இணைந்து போராடுவோம் என்று அழைக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் முன்னணியின் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் நேற்று முன்தினம் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சமஷ்டியை தருகிறோம்,13வது திருத்தச் சட்டத்தை தருகிறோம் என்று நாம் வடக்கு மக்களை அழைக்கக்கூடாது. பேரிடரில் இருந்து மீள நாம் ஒன்றாக இணைந்து போராடுவோம் என்றே அழைக்க வேண்டும்.
இந்திய ஆட்சியாளர்கள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி முழு நாட்டினரையும் ஒன்றாக இணைக்கும் வரலாற்றை எழுதும் போது, இலங்கை மக்களுக்கு மோதலான வரலாறு குறித்து எழுத நேரிட்டுள்ளது.
குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து மலையக மக்களை நாடற்றவர்களாக மாற்றிய போது, செல்வநாயகம் தமிழரசு கட்சியை உருவாக்க முன்வந்தார்.
1956 ஆம் ஆண்டு முதல் மொழிப் பிரச்சினை ஏற்படுத்தியதன் மூலம் 58 ஆம் ஆண்டு சிங்கள, தமிழ் கலவரம் ஏற்பட்டது. வடக்கு,கிழக்கில் ஸ்ரீ எழுத்தில் கிறீஸ் எண்ணெய் பூசும் நிலைமை உருவானது.
1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் வடக்கில் ஆயுதம் தாங்கிய அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
எமது ஆட்சியாளர்கள் மோதல் வரலாற்றை உருவாக்கினாலும் இந்திய ஆட்சியாளர்கள் ஒற்றுமை என்ற வரலாற்றை உருவாக்கினர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.