இஸ்ரேலிய உளவுத்துறை நடவடிக்கையுடன் தொடர்புடைய நான்கு பேரின் மரண தண்டனையை ஈரான் நேற்று திங்கட்கிழமை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர்களின் மேல் முறையீட்டு மனுவை ஈரான் நாட்டு உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியிலிருந்து ஈரானுக்குள் நுழைந்ததாகவும் ஈரான் தற்காப்பு அமைச்சிற்குத் தேவைப்படும் சாதனங்கள் தயாரிக்கும் இஸ்ஃபஹானை தளமாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலையின்மீது குண்டுவீச்சு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ஈரான் எல்லைக்குள் ஊடுருவியதாகவும் அவர்கள்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குண்டுவீச்சு சம்பவத்தை அவர்கள் 2022ஆம் ஆண்டு நிகழ்த்த இருந்தனர் என்றும் அதை ஈரானிய உளவுத்துறை முறியடித்தது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பகை இருந்து வருகிறது.
இஸ்ரேல்மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஈரான் ஆதரிப்பதாகவும் அதே வேளையில் ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.