மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடீமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் தமக்கு ஆதரவு வழங்கி வருவதால் அந்த போர் வெகு தொலைவில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், மற்றொரு உலகப்போர் தவிர்க்க முடியாதது என ஜேர்மன் சான்சலர் Olaf Scholz,இந்த ஆபத்து குறித்து முன்னறிவிப்பு செய்திருந்தார் எனவும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முதல் ஆக்கிரமிப்பின் போது ஜேர்மனி தனது பங்கை சரியாகச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுடனான போரில் ஐரோப்பிய நாடுகளின் பலவீனங்களை தன்னால் புரிந்து கொள்ள முடிந்துள்ளதாக கூறியுள்ள அவர், உக்ரைனுக்கு பெரிய அளவில் நிதி திரட்ட வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் உக்ரைன் அமெரிக்காவின் ஆதரவை இழக்குமா? என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் கொள்கை ஒரு நபரால் பாதிக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த வருடத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.ரஷ்ய படையினர் உக்ரைன் பிரதேசங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன், ரஷ்யாவுக்கு கடுமையாக போராடி வருகிறது.
உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 65 பேர் உயிரிழந்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், தனது நாட்டுக்கான அமெரிக்காவின் நிதியுதவி குறைக்கப்படுவது குறித்து உக்ரைன் கவலை தெரிவித்துள்ளது.