அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் அங்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் இந்த நோய் அங்குள்ள பறவைகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுப் பறவைகளும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும் அவை வானில் பறக்கும் போது திடீரென இறந்து விழுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இந்த பறவை காய்ச்சல் நோய் பறவைகளை மட்டும் தாக்குகிறதா அல்லது மனிதர்கள் மற்றும் அவர்களின் செல்லப்பிராணிகளையும் பாதிக்கிறதா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், பறவைகளுடன் நெருங்கிப் பழகுபவர்கள் கடந்த காலங்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
H7N9 மற்றும் H5N1 வைரஸ்கள் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. பறவை காய்ச்சல் வைரஸ் பொதுவாக பறவைகளின் உமிழ்நீர் மற்றும் கழிவுகள் மூலம் சூழலுக்குள் பரவுகிறது.
இந்த வைரஸ் காற்றில் கலந்துவிடும், மக்கள் அந்த காற்றை சுவாசிக்கும் போது அல்லது வைரஸ் இருக்கும் இடத்தைத் தொட்டு, அதே கைகளால் அவர்களின் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடும்போது, இந்த வைரஸ் மனித உடலுக்குள் நுழைகிறது.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலருக்கு எந்த அறிகுறிகளும் தென்படுவதில்லை மற்றும் லேசான நோய் மட்டுமே இருக்கும். சில சமயங்களில், கண் சிவத்தல், காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தசைவலி, தலைவலி, சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. சில சமயங்களில் நோய் கடுமையாக இருந்தால் மரணம் கூட ஏற்படலாம்.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தப்பட வேண்டும். உடலில் இருந்து வைரஸ் முற்றிலும் அகற்றப்படும் வரை சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.