எதிர்வரும் மார்ச் மாதம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை

இந்தியாவுடன் தற்போது பேச்சுவார்த்தை மட்டத்தில் இருக்கும் பொருளாதாரம் மற்றும் தொழிற்நுட்பட ஒத்துழைப்புக்கான எட்கா உடன்படிக்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் கையெழுத்திட இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதுடன் இரண்டு நாடுகளின் வர்த்தக முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் சுங்க வரிகளை குறைக்கவும் ஏற்றுமதியின் போது சுங்க வரி இல்லாத தடைகளை நீக்குவது குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என இலங்கையின் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் இந்தியா சுங்க வரியை 90 வீதமாக குறைக்க எதிர்பார்த்துள்ளது. இலங்கை 80 வீதுமாக சுங்க வரியை குறைக்க எதிர்பார்த்துள்ளது. சேவைகள், முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு என்ற பல துறைகள் உடன்படிக்கையில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே இந்தோனேசியாவுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷூடனும் இப்படியான உடன்படிக்கையை செய்து கொள்வதற்காக மார்ச் மாதம் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சீனா, மலேசியா ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை இந்த வருடம் துரிதமாக ஆரம்பிக்கப்படும் எனவும் வீரசிங்க மேலும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin