புதிய சட்டம் மேற்குலகம் கவலை: முடங்கும் டிஜிட்டல் பொருளாதாரம்

இணையதளங்கள் மற்றும் சமூக வலையதங்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை கடந்த பாராளுமன்ற அமர்வில் நிறைவேற்றியுள்ளது.

சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது முதல் அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சமூக வலையதளங்கள் மற்றும் இணையதளங்கள் ஊடாக இலங்கை டிஜிட்டல் பொருளாதார பன்மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும், சமூக ஊடக பயன்பாட்டாளர்களும், இணையதளங்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை உதயமாகும் என நாட்டில் பல டிஜிட்டல் செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச நாடுகளும் அரசாங்கத்தின் இந்த புதியச் சட்டம் தொடர்பில் கவலைகளை வெளியிட்டு வருகின்றன.

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்,

‘‘இலங்கையின் நிகழ்நிலை காப்புச் சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது.‘‘ என தமது எக்ஸ் தளத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.

‘‘நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாக கனடா அவதானித்து வருகிறது. கருத்து சுதந்திரம் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கம் குறித்து சிவில் சமூகம் மற்றும் தொழில்துறை கவலைகளை நாம் அவதானித்துள்ளோம். இரண்டையும் பாதுகாக்கும் வகையில் இது செயல்படுத்தப்படுவது முக்கியம்.‘‘ என இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல நாடுகள் அரசாங்கத்தின் இந்தச்சட்டமூலம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Recommended For You

About the Author: admin