அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்மொழியப்பட்ட சட்டமூலம் திருத்தமின்றி தற்போதைய வடிவிலே நிறைவேற்றப்படுமாயின் உரிய காரணம் இன்றி அவசியமற்ற கைதிகளை மேற்கொள்வதற்கு முப்படை, பொலிஸார் மற்றும் கடலோரக் காவல்படைக்கு அதிகாரம் வழங்கப்படும் என கர்தினால் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அரசியல் சாசனம் அளித்துள்ள தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்ற வாக்கெடுப்பு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவற்றினை கட்டாயமாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கர்தினால் கோரியுள்ளார்.
இதனிடையே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக நிறுவனங்களுக்கு இடையேயான நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க கடந்தவாரம் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
பல்வேறு தரப்பினரால் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துகளுக்கு இணங்க திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வெளியிடவும், சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி அளித்ததது.
இருப்பினும், இந்த சட்டமூலம் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) உள்ளிட்ட அமைப்புகள் சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொண்டு இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன