பழிதீர்க்க நடத்தப்பட்டதா பெலியத்த துப்பாக்கிச் சூடு?

பெலியத்த பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் உள்ளிட்ட ஐவர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 40 வயதான ஹசித வன்சுக, 47 வயதான சமன் பிரசன்ன பெரேரா, 34 வயதான சமீர மதுஷங்க, 36 வயதான புத்திக ராஜபக்ச மற்றும் 44 வயதான சம்பிய ஜயதிலக்க ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இறந்தவர்களில் ஹசித வன்சுக, சமீர மதுஷங்க மற்றும் புத்திக ராஜபக்ச ஆகியோர் 2018ஆம் ஆண்டு தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பெலியத்த பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று காலை 8.30 முதல் 8.40 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட இந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

வெள்ளை நிற டிஃபென்டர் காரில் பயணித்த குழுவினரை, பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்று வரும் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ,

தங்காலை பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் (SDIG) மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தென் மாகாண குற்றப்பிரிவு, தங்காலை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு, தங்காலை தலைமையக பொறுப்பதிகாரியின் கீழ் தனியான குழு, பெலியத்த பொலிஸ் குழு, பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குழு என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin