சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் மூலமான போக்குவரத்து நெருக்கடி உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலியை சீர்குலைத்துள்ளது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021 மார்ச் மாதம் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று, மிகவும் பரபரப்பான கப்பல் பாதைகளில் பிரதானமாக கருதப்படும் சூயஸ் கால்வாயில் சிக்கி உலகையே கலங்கச் செய்தது.
இந்த சம்பவத்தை டைட்டானிக் கப்பல் சம்பவத்துடன் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
டைட்டானிக் கப்பலை விட இரண்டு மடங்கு அளவுள்ள எவர் கிறீன் கப்பல், சூயஸ் கால்வாயின் மிகக் குறுகிய பகுதியில் ஆறு நாட்கள் சிக்கி, 400க்கும் மேற்பட்ட கப்பல்களையும் கிட்டத்தட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தையும் பாதித்தது.
சூயஸ் கால்வாயூடான அப்போதைய போக்குவரத்து தடை ஆறு நாட்களில் 60 பில்லியன் டொலர்களை அழிந்திருந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு மேல் குறித்த மார்க்கமூடான கப்பல் போக்குவரத்து தடை தற்சமயம் நீடித்தால் என்னவாகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
சூயஸ் கால்வாய் கப்பல் வழித்தடத்தை ஹூதி தாக்குதல்கள் எவ்வாறு சீர்குலைத்துள்ளன
2023 நவம்பர் 15 முதல் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்களைத் தாக்கத் தொடங்கிய பின்னர் சூயஸ் கால்வாய் வழியான கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனை தளமாகக் கொண்ட ஹூதிகள் கூறியுள்ளனர்.
அக்டோபர் 7 முதல், பாலஸ்தீனிய போராளிக் குழு, ஒரு திடீர் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் ஹமாஸுடன் போரில் ஈடுபட்டுள்ளது.
ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் பாதையில் ஹூதிகளின் தாக்குதல்களுக்கு பயந்து, கப்பல் நிறுவனங்கள் ஆப்பிரிக்க கண்டத்தின் Cape of Good Hope (கேப் ஆஃப் குட் ஹோப் என்பது தென்னாப்பிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா ஆகும்) சுற்றி நீண்ட மாற்று பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.
1869 ஆம் ஆண்டுக்கு முன் கேப் ஆஃப் குட் ஹோப் முதன்மையான கப்பல் வழித்தடமாக இருந்தது. சூயஸ் கால்வாய் பிரெஞ்சு மற்றும் ஒட்டோமான் பேரரசால் கூட்டாகத் திறக்கப்பட்டதன் பின்னர் அது அதன் முக்கியத்துவத்தை இழந்தது.
சூயஸ் கால்வாய் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பயண நேரத்தைக் குறைத்தது.
தற்போது வரை, சுமார் 19,000 கப்பல்கள், சுமார் 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்களை சுமந்து கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் சூயஸ் கால்வாயில் வழியில் செல்கின்றன.
இது உலகின் முக்கிய வர்த்தக பாதைகளில் ஒன்றாக உள்ளது என்று தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக, உலக வர்த்தகத்தில் 12 சதவீதமும், கடல்சார் எரிபொருள் வர்த்தகத்தில் 10 சதவீதமும் செங்கடல் வழியாகவே செல்கிறது.
ஒரு உதாரணத்துக்கு ஒரு கப்பல் சீனாவில் உள்ள துறைமுகத்திலிருந்து புறப்பட்டால், அது 18,520 கிமீ (10,000 கடல் மைல்கள்) கடந்து வடக்கு ஐரோப்பாவை அடைய சுமார் 27 நாட்கள் ஆகும்.
இருப்பினும், கப்பல்கள் இப்போது கேப் ஆஃப் குட் ஹோப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இது முழு ஆப்பிரிக்கக் கண்டத்தையும் சுற்றி வருவதால், குறித்த கப்பல் அதன் இலக்கை அடைய 37-41 நாட்கள் ஆகும்.
(மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி)
இதனால், கப்பல்கள் மேலதிகமாக 6,000 கி.மீ. பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் என்பதுடன் கப்பலில் சுமந்து செல்லப்படும் பொருட்களுக்கான கட்டணத்தையும் சுமார் 20-30 சதவீதம் வரை அதிகரிக்கும்.
காரணம் மாற்றுப் பாதையில் செல்லும் ஒவ்வொரு வணிகக் கப்பலும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே பயணம் செய்வதற்கு 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக செலவிடும்.
பனாமா கால்வாயின் துயர நிலை
சூயஸ் கால்வாய் போக்குவரத்து துயரங்களுக்கு மத்தியில் அட்லாண்டிக் மற்றும் பசுபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாய் ஊடான மற்றொரு முக்கியமான கப்பல் பாதையும் வறட்சி போன்ற சூழ்நிலைகளால் தடையை எதிர்கொள்கிறது.
வறட்சி, குறைந்த மழைப்பொழிவு காரணமாக, கால்வாயின் நீர்மட்டத்தை பல தசாப்தங்களில் மிகக் குறைவாகக் குறைத்துவிட்டது, இதனால் பனாமா குறைந்த கப்பல்களை அதன் வழியாக செல்ல அனுமதித்துள்ளது.
நிலைமையை முன்னோக்கி கொண்டு செல்ல, ஒரு வணிகக் கப்பலின் பாதையானது ஒரு நாளில் அரை மில்லியன் பனாமேனியர்கள் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான தண்ணீரை உட்கொள்ளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தி எகனாமிஸ்ட்டின் அறிக்கையின்படி, உலக வர்த்தகத்தில் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள பனாமா கால்வாய் வழியாக கப்பல் போக்குவரத்து சுமார் 30 சதவீதம் குறைந்துள்ளது, இதனால் ஏற்றுமதி வருவதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 35 முதல் 40 கப்பல்கள் கால்வாயை கடந்து செல்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பொருட்கள் கால்வாய் மூலமாக 170 நாடுகளுக்கு செல்கிறது.
எடுத்துக்காட்டாக, மேலே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு கப்பல் பனாமா கால்வாய் வழியாக நியூயோர்க் நகரத்திற்கும் சான் பிரான்சிஸ்கோ நகருக்கும் இடையே 8,370 கி.மீ. தூரத்தில் செல்லும்.
இதற்கு மாற்று பாதையாக பயன்படுத்தப்படும் கேப் ஹார்ன் (தென் அமெரிக்காவின் தெற்கு முனையம்) வழியாக கப்பல் பயணித்தால் அந்த தூரம் 22,500 கி.மீ. தூரமாக அதிகரிக்கும்.
அதேநேரம், பனாமா கால்வாக்குப் பதிலாக கேப் ஹார்ன் பாதையில் செல்லும் ஒரு கப்பல் 18 நாட்கள் மேலதிகமாக பயண நேரம் எடுக்கும்.
இந் நிலையில், இரண்டு முக்கியமான வர்த்தக வழிகள் இடையூறுகளை எதிர்கொள்வதால், உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, பணவீக்கத்தை உயர்த்துவது பற்றிய கவலைகளை தற்சமயம் எழுப்பியுள்ளது.