நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய 400 Tomahawk ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்காக ஜப்பான், அமெரிக்காவுடன் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்காக தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நேற்று (18) அமெரிக்காவுடன் இந்த உடன்படிக்கையை செய்துக்கொண்டுள்ளது.
Tomahawk ஏவுகணைகள் ஆயிரத்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கு நோக்கி தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.35 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இருவகை Tomahawk ஏவுகணைகளை ஜப்பானுக்கு விற்பனை செய்ய கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் பென்டன் ஒப்புதல் வழங்கியது.
இந்த நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்குள், தனது மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் இரண்டு சதவீதத்தை நாட்டின் பாதுகாப்புக்காக செலவிட ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் அடுத்த நிதியாண்டிற்காக 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் பாதுகாப்புக்காக ஒதுக்கியுள்ளது.
வடகொரியா அணுவாயுத ஏவுகணை கொண்டுள்ள நாடு என்பதால், பிராந்தியத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஜப்பான் கூறியுள்ளது.
வடகொரியா அடிக்கடி ஏவுகணைகளை பரிசோதித்து தனது எதிரி நாடுகளை அச்சமடைய செய்து வருகிறது.
தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பான் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
அதேவேளை ஜப்பானில் தயாரிக்கப்படும் பேட்ரியாட் ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு வசதியாக கடந்த டிசம்பர் மாதம் ஜப்பான் ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியது