தமிழகம் வரும் மோடி!

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் இன்று சென்னையில் தொடங்குகிறது. இது தமிழகத்தின் 4 நகரங்களில் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து விமானத்தில் மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்கம் வருகிறார்.

விழாவை தொடங்கி வைத்த பின்னர், ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர், நாளை காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து விமானத்தில் திருச்சி செல்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். அதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து அயோத்தி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: webeditor