உகண்டாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு, ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி உகண்டா சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (18.01.2024) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்திக் குறிப்பில், உகண்டா குடியரசின் ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அணிசேரா நாடுகள் அமைப்பில் இலங்கை
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு, “உலளாவிய கூட்டு செழுமைக்கான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்தல்” என்ற தலைப்பில் ஜனவரி 19 மற்றும் 20ஆம் திகதிகளில் உகண்டாவின் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து, ஜி 77 மற்றும் சீனாவின் 3ஆவது தென் மாநாடு ஜனவரி 21 – 22 ஆம் திகதிகளில் “எவரையும் கைவிடக்கூடாது” என்ற தலைப்பில் கம்பாலா நகரில் நடைபெறவுள்ளது.

மேற்படி இரு மாநாடுகளிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றவுள்ளதோடு, ஆபிரிக்க வலயத்தில் காணப்படும் உலக தெற்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

அணிசேரா நாடுகளின் அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிப்பதோடு, குறித்த அமைப்பு பெண்டூன்க் கொள்கையை மையப்படுத்தி அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தேவைகளை நிறைவேற்றும் நோக்குடன் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை அணிசேரா நாடுகள் அமைப்பின் ஆரம்ப உறுப்பினர் என்பதோடு, 1976 – 1979 காலப்பகுதிகளில் அதன் தலைமைத்துவத்தையும் வகித்துள்ளது. 1976ஆம் ஆண்டில் 5 ஆவது அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கை நடத்தியிருந்தது.

உகண்டா குடியரசு
ஜி 77 மற்றும் சீனாவின் 3ஆவது தெற்கு மாநாட்டில் 134 நாடுகள் அங்கம் வகிப்பதோடு, வர்த்தகம், முதலீடு, நிலையான அபிவிருத்தி, காலநிலை அனர்த்தம், வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மிகப் பெரிய கூட்டிணைவு என்ற வகையில், உலகளாவிய தெற்கு நாடுகள் தங்களது கூட்டு பொருளாதார தேவைகளை அறிவித்தல், மேம்படுத்தல் மற்றும் உலகளாவிய தெற்கு நாடுகளின் பேச்சு என்பவற்றிக்கு இந்த மாநாடு களம் அமைக்கும்.

ஜி 77 மற்றும் சீன மாநாட்டின் தலைமைத்துவத்தை இதுவரையில் கியூபாவும், அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைத்துவத்தை அசர்பைஜான் குடியரசும் வகித்து வரும் நிலையில், மேற்படி இரு மாநாடுகளுக்கும் இம்முறை உகண்டா குடியரசு தலைமைதாங்க உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டா விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, காலநிலை அனர்த்தம் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor