2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாடத்திட்டம தொடர்பான இரண்டு வினாத்தாள்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரீட்சைக்கான புதிய திகதியையும் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற, 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் (2024) விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதியை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்வதாக ஜனவரி 12 ஆம் திகதி அன்று அறிவித்திருந்தது.
குறித்த வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தார்.
அதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதி வினாத்தாளை இரத்து செய்து, மீண்டும் அப்பரீட்சைக்கான பகுதியை நடத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்தது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் ,அலுவலக உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையில், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் விவசாய விஞ்ஞான பாடத்தின் முதலாம் வினாத்தாளில் இருந்தும் பல கேள்விகள் கசிந்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிணங்க, இரண்டு வினாத்தாள்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டு புதிய பரீட்சை திகதியும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II பகுதி எதிர்வரும் பெப்வரி 01 ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் முற்பகல் 11.40 மணிவரை நடைபெறும்.
விவசாய விஞ்ஞான பாடத்திற்கான I பகுதி அன்றைய தினம் பிற்பகல் 01.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறும்.
இந்தப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டை அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேவேளை தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.