அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் யேமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவளித்து வருகிறது. இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து சமீபத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இந்நிலையில், அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
காசா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.