சொர்க்கத்துக்கு செல்ல தயாரான 30 பேர்

சொர்க்கத்துக்கு செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி 7 பேரை தற்கொலைக்குத் தூண்டிய ருவன் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் பிரகாரம், இந்தக் குழு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்தக் குழுவில் சில பிக்குகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களில் பௌத்த தத்துவம் எனக் கூறி ருவன் பிரசன்ன பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரைப் பின்பற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்ட 30 பேரை, தீவிரவாதக் கண்ணோட்டத்தில் இருந்து விடுவிக்கும் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மத போதனைகளை திரித்து சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் சில நபர்களின் செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

சமூகத்தை சீர்குலைக்க தூண்டும் நபர்கள் குறித்து ஆராய அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin