கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகள் மற்றும் இலங்கை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதன் முக்கியத்துவத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்காக கடன் வழங்கும் நாடுகளுடன் கடந்த வருட இறுதியில் கொள்கை அடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டது. இந்த நிலையில், ஜப்பான் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் அங்கம் வகிக்காத தரப்பினர் உடன்படிக்கைகளில் ஈடுபடும் போது வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
ஜப்பான், பிரான்ஸ் மற்றும் இந்தியா இணைந்து தலைமை வகிக்கும் கடன் வழங்குநர் குழுவில் 15 நாடுகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.
சுதந்திரத்திற்குப் பின்னர் மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களை மறுசீரமைத்து வருகிறது.
இதன்படி, இலங்கை மற்றும் கடன் வழங்குநர்களுக்கு இடையில் கடந்த நவம்பர் மாதம் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டது.
இதற்கமைய, 5.9 பில்லியன் டொலர் நிலுவையில் உள்ள பொதுக்கடனை மீள செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதனிடையே, இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன் 36.4 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.