பெயர் மாற்றினாலும் கொள்கை மாறாதவர்கள் ஜே.வி.பியினர்: ஐக்கிய மக்கள் சக்தி

பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி, தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமக்கு பயங்கரவாத வரலாறு இருப்பதாலேயே ஜே.வி.பி. கட்சியானது அப்பெயரில் வராமல் புதியதொரு பெயரை தெரிவுசெய்து தங்களை அடையாளப்படுத்தியுள்ளது.

பெயர் மாறினாலும் அவர்களின் கொள்கைகள் இன்றும் மாறவில்லை.

நாட்டில் பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்.

எத்தனை தொழிற்சாலைகளை எரித்திருப்பார்கள்? எத்தனை ட்ரான்ஸ்போமர்களை கொளுத்தி இருப்பார்கள்? எத்தனை பேருந்துகளை எரித்திருப்பார்கள்?

ஏன் நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை திறக்க அனுமதிக்கவில்லை.

வெளிநாட்டு வருமானத்தை தடுத்தனர். இவ்வாறு பொருளாதாரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்.

இன்று தமது பெயரை மாற்றிக்கொண்டு தேசிய மக்கள் சக்தியினர் என வெளியில் முகம் காட்டுகின்றனர். பெயரை மாற்றியதன் நோக்கம் என்ன?

ஊர் பகுதிகளில் உள்ள ரௌடிகள் சிறைக்கு சென்று மீண்டும் வரும்போது தமது பெயர்களை மாற்றிக்கொண்டே வருவார்கள். அதுபோலவே ஜே.வி.பி. இன்று என்.பி.பி.யாக வந்துள்ளது.

தமது பயங்கரமான – பயங்கரவாத வரலாற்றால்தான் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஜே.வி.பியினரின் கொள்கை மாறவில்லை.

அடுத்த தேர்தலில் எமது கூட்டணியே வெற்றிபெறும். அதனால்தான் எம்மீது ஜே.வி.பியினர் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர் ” என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin