ரணில் வருகையால் பயன் இல்லை : செல்வம் எம்.பி விமர்சனம்!

ஜனாதிபதியின் வவுனியா வருகையானது சம்பிரதாய பூர்வமான ஒரு நிகழ்வே தவிர அதனால் பயன் ஏதும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது நிலஅபகரிப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக நாம் அவருடன் பேசியிருந்தோம். நாம் கூறும் விடயங்கள் உடனடியாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் சென்றிருந்தோம். ஆனால், அது நடைபெறவில்லை. நாங்கள் கேட்ட விடயங்களிற்கான சரியான பதிலை அவர் தரவில்லை. சம்பிரதாயபூர்வமான ஒரு கூட்டமாகவே இது இடம்பெற்றது.

இதேவேளை ஜனாதிபதி வந்துசென்ற பின்னர் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இராணுவமுகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அது என்ன தேவைக்காக அமைக்கப்பட்டது என்ற விடயம் தெரியவில்லை. எமது மக்களை அச்சுறுத்துவதற்கான செயற்பாடே அது. ஏற்கனவே பொலிஸ் சோதனைசாவடி அங்கு இருக்கின்றது.

இந்நிலையில் இராணுவத்தின் தேவை என்ன என்று புரியவில்லை. இது தொடர்பாக நாம் பாராளுமன்றில் பேசுவோம்.

ஜனாதிபதிதேர்தல் தொடர்பாக பல ஊகங்கள் பேசப்படுகின்றது. வடகிழக்கில் எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாத சூழலில் இந்த தேர்தலை கையாளும் விதம்தொடர்பாக நாம் சிந்திக்கவேண்டும். அனைத்து கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக நாம் பரிசீலிக்கவேண்டும்.

எமது கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையை நாம் உருவாக்கவேண்டுமானால் இந்த முயற்சியே பலனளிக்கும் என்று நான் நினைக்கின்றேன். அந்த ஒற்றுமை சாத்தியமா என்ற கேள்வி இருக்கிறது.

தமிழ்தேசியகூட்டமைப்பு சிவில் அமைப்புக்களுடனும் தேசியகட்சிகளுடனும் பேசி ஒரு முடிவிற்கு வருவது சாலச்சிறந்ததாக இருக்கும். தென் இலங்கை வேட்பாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரு நிபந்தனைக்குட்படுத்தவேண்டும்.

அத்துடன் அரசால் கொண்டுவரப்படவுள்ள புதியபயங்கரவாத தடைச்சட்டம் மோசமானதாகவே உள்ளது. அதன்மூலம் ஜனநாயக போராட்டங்கள் தடுக்கப்படும் நிலை காணப்படுகின்றது. பத்திரிகை சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பமும் உள்ளது. இதற்கு நாம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பைக்காட்டுவோம். இந்தசட்டம் ஒழிக்கப்படவேண்டும் என்பதே ஐநாசபையின் நிலைப்பாடாக உள்ளது. எனினும் இலங்கை அரசாங்கம் அதனை ஏமாற்றிவருகின்றது. என்றார்.

Recommended For You

About the Author: admin