வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
அந்த அனைத்து விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
வடமாகாணத்திற்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்குத் தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வடமாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.