ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதி நிதியத்தினால் தற்போது வழங்கப்படும் மருத்துவ உதவிக் கொடுப்பனவுகளை 2024 ஜனவரி 01ஆம் திகதி முதல் 50விகிதத்திலிருந்து 100விகிதமாக ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2024ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத்குமார தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை மருத்துவ உதவி வழங்கப்படாத நோய்கள் கண்டறியப்பட்டு, அந்த நோய்களுக்கான மருத்துவ உதவிகள் வழங்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு, தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகளில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவ உதவி வழங்கப்படும்.
நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ உதவி பெறுவதற்காக நகரத்திற்கு வருவதைக் குறைப்பதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் ஜனாதிபதி நிதியத்தில் இலகுவாகப் பதிவு செய்யும் முறையும் 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கராபிட்டிய வைத்தியசாலையில் வேலை நேரத்தின் பின்னர் இருதய சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் கொடுப்பனவு இந்த வருடம் முதல் அதிகரிக்கப்படவுள்ளதுடன் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் இந்த முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் ராகம வைத்தியசாலையில் சிறு குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சைகளுக்காக ஒரு மில்லியன் ரூபா வரையான மருத்துவ உதவி தொகையும் வழங்கப்படும். மேலும், தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளுக்கு இது வரை மருத்துவ உதவி வழங்கப்படாததோடு அதற்கான மருத்துவ உதவி இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
தனியார் அல்லது அரை அரசு மருத்துவமனைகள் தவிர, அரசு மருத்துவமனைகளும் இந்த ஆண்டு முதல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் வெளியில் செய்யப்படும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ உதவி வழங்கப்படும்.
மருத்துவ உதவிகளை வழங்குவதில் நோயாளர்களின் குடும்ப அலகு ஒன்றின் மாதாந்த வருமான வரம்பான 150,000 ரூபாவை இந்த வருடம் முதல் 02 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவ உதவி பெற வேண்டிய நடுத்தர மக்கள் ஜனாதிபதி நிதியில் இருந்து மருத்துவ உதவி பெற முடியும்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டிலும் மக்களுக்கான விரைவான மற்றும் விரிவான சேவைகளை வழங்குவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி நிதியம் செயற்பட்டதாக அதன் செயலாளர் சரத் குமார தெரிவித்தார்.
2022 ஆகஸ்ட் முதல் பணம் செலுத்தாமல் குவிந்துள்ள 8,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி விண்ணப்பங்கள் உட்பட, அந்த ஆண்டின் இறுதிக்குள், சுமார்12,000 மருத்துவ உதவி விண்ணப்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1,342 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கு, 3458 மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பெறப்பட்டதோடு அந்த விண்ணப்பங்கள் அனைத்திற்கும் பணம் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதற்காக செலுத்தப்பட்ட தொகை 844.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.
அதேபோல் 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்றாலும் உயர்கல்வியை தொடர்பவதற்கான நிவாரணம் தேவைப்படும் மாணவர்களுக்காக கல்விப் பிரிவுவொன்றுக்கு 30 பேர் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 கல்விப் பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 5000 கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
அதற்கமைய அனைத்து மாதங்களிலும் பணிகளை ஆரம்பிக்கும் முதல் இரு தினங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்புச் செய்து அவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS)மூலம் அறிவிக்கப்படும். தற்போது இந்த மாணவர்களுக்காக 10 மாதாந்த தவணை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றிருந்தாலும் உயர்கல்வியை தொடர்வதில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுக்காக 50 கல்விப் பிரிவொன்றுக்கு 50 பேர் என்ற அடிப்படையில் 100 கல்விப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 5000 மாணவர்களுக்கு 24 மாதங்களுக்கு 6000 ரூபாய் கொடுப்பனவை மாதாந்தம் வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் தெரிவு செய்யப்பட்டு, அந்த மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 90 மாணவர்களுக்கு 31.5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் செய்யக் கூடிய குடும்பங்களை மேம்படுத்துவதற்காக பிரதேச செயலாளர்கள் ஊடாக நிதி மற்றும் பொருளுதவி வழங்கும் வேலைத்திட்டமும் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
மேலும், வறுமையில் வாடும் ஆனால் சுயதொழில் அல்லது பிற வேலைகளைச் செய்ய முடியாத குடும்பங்களை அடையாளம் காண, பிராந்திய செயலகங்கள் மூலம் மாதாந்தம் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் 2023 இல் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டன. சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் சமய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சமூக நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மருத்துவ உதவித் தொகையை செலுத்துவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைபாடுகள் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதி நிதியத்திற்கு ஒப்படைக்கப்படும் விண்ணப்பப்படிவத்திற்கு மூன்று வேலை நாட்களுக்குள் பணத்தை செலுத்தத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும், அறுவை சிகிச்சை/சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உத்தரவாதச் சான்றிதழ்கள் சில மணி நேரங்களுக்குள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளைப் பெற்று மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது, மருத்துவமனைகளுக்கு அந்த நிதியத்தால் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையை மருத்துவக் கட்டணத்தில் இருந்து குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, இந்த பணிகளை நிறைவேற்ற நோயாளி/விண்ணப்பதாரர் ஒருமுறை மட்டும் ஜனாதிபதி நிதியத்திற்கு வருகை தந்தால் போதும் எனவும், எந்தவொரு விண்ணப்பதாரரும் தேவையில்லாமல் நிதியத்திற்கு அழைக்கப்படவோ அல்லது அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படவோ மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் சரத் குமார மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தமது கடமைகளை ஆரம்பிக்கும் ஜனாதிபதி நிதியத்தின் ஊழியர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வும் நேற்று (03) நிதிய அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு ஹுனுப்பிட்டி கங்காராம விகாராதிபதி வண. கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையில் ஆசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சரவை செயலாளர் டொனால்ட் பெர்னாண்டோ, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷா ஜயவர்தன, திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் அசல ருவன் வீரகோன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.