போதைப் பொருட்களுக்கு எதிரான இலங்கை பொலிஸார் முன்னெடுத்துள்ள சர்ச்சைக்குரிய நடவடிக்கை, கடும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன், உடனடியாக ‘ஒபரேஷன் யுக்திய’ என்ற போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினார். அவர் ஏற்கனவே மிரிஹான பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர்களை சித்திரவதை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குற்றவாளி என்று கண்டறியப்பட்டவர். அடிப்படை மனித உரிமைகளை மீறியவர் என்ற வகையில் அவர் பொலிஸின் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவரது நடவடிக்கைகளை “அதர்மத்தின் ஒரு செயல்பாடு” என்று சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் செயற்பாட்டாளர் சுதேஷ் நந்திமால் சில்வா கூறியுள்ளார். ’ஒபரேஷன் யுக்திய’ மூலம் ஏராளமான சட்டவிரோத கைதுகள் இடம்பெறுவதற்கு அப்பாற்பட்டு இதர மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.
மக்கள் எவ்விதமான காரணங்களும் இன்றி கைது செய்யப்படுகின்றனர். போதைப் பொருட்கள் அவர்கள் இடங்களில் வைக்கப்பட்டு அதைக்காட்டி கைது செய்யப்படுகின்றனர். மேலும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. கைதிகளால் நித்திரைகொள்ளக் கூட முடியவில்லை. அவர்களுக்கு முறையாக உணவு கூட கிடைப்பதில்லை. இதெல்லாம் இந்த அதர்ம செயல்பாட்டின் விளைவு” என சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த டிசம்பர் 17 முதல், இன்று (4) காலை வரை சுமார் 23,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அவர் கூறியது போன்று போலி குற்றச்சாட்டுகளில் செய்யப்பட்ட கைதுகளும் அடங்கும்.
பொலிஸாரே போதைப் பொருட்களை வைத்துவிட்டு அவர்களை கைது செய்வது நடந்துள்ளது. சர்வதேச கடப்பாடான ICCPR உடன்படிக்கையில் இலங்கை 1980இல் கைச்சாத்திட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் மூலம் ஒரு நபர் சட்டவிரோதமாக தண்டிக்கப்படும் போது அரசு அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசின் ஒரு ஆய்வில் ‘சிறைகளில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது’ எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கேகாலை சிறைச்சாலையில் 511% அதிகமாகவும், கொழும்பு ரிமாண்ட் சிறையின் அது 433% அதிகமாகவும் இருந்தது என அந்த அறிக்கை கூறுகிறது.
அப்படி மிக அதிகமான வகையில் கைதிகள் அடைக்கப்படுவது சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதிப்பது மட்டுமின்றி மேலும் பல பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கும். சிறைக்கதிகளின் உரிமைகள் நெல்சன் மண்டேலா விதிமுறைகள் என அழைக்கப்படுகிறது. அது இலங்கை அங்கம் வகிக்கும் ஐ நா பொது சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
இலங்கைச் சிறைச்சாலைகளில் கைதிகளின் நிலை ‘ரின்னில் அடைக்கப்பட்ட மீன்கள்’ போலுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது என அரசின் ஆய்வே கூறுகிறது. அது கடந்த 2016ஆம் ஆண்டு 146.8% அதிகம் என்ற அளவில் குறைந்தாலும் பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து 2020ஆம் ஆண்டு 248.8% என்ற நிலையில் இருந்தது.
ஆனால், பொதுப் பாதுகாப்பு அமைச்சோ சிறைகளில் நெரிசலை தம்மால் தடுக்க முடியாது எனக் கூறிவிட்டது. “சிறைச்சாலையில் நெரிசல் அதிகரிக்கிறது என்பதற்காக சந்தேகநபர்களை கைது செய்வதை நிறுத்த முடியாது” என அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக கூறியுள்ளார். சிறையில் நெரிசலை கையாள்வது சிறைச்சாலை அமைச்சரின் பொறுப்பு என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு மீறி ஆட்கள் இருப்பதையும் அங்கு நெரிசல் அதிகமாக உள்ளதையும் அரசு அறிந்திருந்தாலும் அதற்கு பொறுப்பேற்க முன்வரவில்லை என்பதே இதில் கசப்பான உண்மை.
2020ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் நெரிசல் குறித்து வெளியிட்ட 883 பக்க அறிக்கையில் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தது. அதில் “ சிறைவாசம் முடியும் நிலையில் திருந்தி வாழ விரும்புவோர், இதர நூற்றுக்கணக்கானவர்களுடன் ஒரு இடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் போதும், அதிகாரிகள் மற்றும் ஏனைய கைதிகளின் எதிர்மறை நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் வன்முறையில் ஈடுபடும் சூழலும், அதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் நிலையும் உள்ளது” எனக் கூறியுள்ளது.
அது மாத்திரமில்லாமல் அந்த அறிக்கையில் “சிறைச்சாலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் கைதிகளை மனித உரிமைகள் விழுமியங்களின் அடிப்படையில் தடுத்து கையாள்வதற்கு சிறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை, மேலும் அவர்கள் ஒழுங்கை நிலைநாட்ட பலப்பிரயோகத்தை கையாள்கின்றனர்”. அது போதுமானது என்ற வாதமும் வைக்கப்பட்டது.
அதன் காரணமாக “சிறைக் கைதிகளும் அதே முறையின் எதிர்வினையாற்ற வழி செய்கிறது” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களுக்கு எதிரான தமது யுத்தத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என டிரான் அலஸ் கோரியுள்ளார். இந்த நடவடிக்கை வெற்றிபெற மக்கள் ஆதரவு, அதிலும் குறிப்பாக ஊடகங்களின் ஆதரவு தேவை என அவர் கூறுகிறார்.
”யுத்த காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு எப்படி ஒருங்கிணைந்த ஆதரவு இருந்ததோ அதேப்போன்ற ஆதரவு இப்போதும் மிகவும் முக்கியமானது” என அவர் தெரிவித்துள்ளார். கொவிட் பெருந்தொற்று காலத்தில், அதை எதிர்த்து போராடும் நடவடிக்கையை அரசு ஒரு யுத்தத்தை எதிர்கொள்வது போன்றது என கூறியது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில், ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இன்றுவரை 10,000ற்கும் அதிகமானவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவிலை. அதற்கான எந்த பதிலும் அரசிடமிருந்து வரவில்லை.
போர்க்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் ஆகியவை இன்றளவும் விசாரிக்கப்பட்டுப் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை.