தைவான் நாட்டு வான்வெளியில் மூன்று சீன பலூன்கள் காணப்பட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுபோன்று, கடந்த மாதமும் பலூன்கள் காணப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.
சீன பலூன்களை, உளவுக்கருவிகள் என கருதி அமெரிக்கா 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் சுட்டு வீழ்த்தியது. இதனால், சீனா உளவு பார்க்க பலூன்களைப் பயன்படுத்துவது அனைத்துலக விவகாரமாக பேசப்பட்டது.
ஆனால், இதைச் சீனா மறுத்தது. பொதுமக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் பலூன் தவறுதலாகப் பாதை மாறிவிட்டது என்று கூறியது.
தைவானில் ஜனவரி 13 ஆம் திகதி நடக்கவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக சீனாவின் இராணுவ, அரசியல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தொடர்பில் அதிக எச்சரிக்கையுடன் தைவான் உள்ளது.
தைவானின் பாதுகாப்பு அமைச்சு கடந்த மாதத்திலிருந்து, இது போன்று சீன பலூன்கள் தனது நீரிணையை கடந்து சென்றதாக அறிவித்தது.
சீனாவின் இராணுவ நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தபோது, கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பலூன்கள் அதன் நீரிணையைக் கடந்து சென்றதையும் அவற்றில் மூன்று, தீவின் மையத்தில் பறந்தன என்றும் தைவானின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.