ஈரான் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்ட நான்கு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரண்டு குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
அவரது கல்லறைக்கு அருகில் சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தீவிரவாத தாக்குதல் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020 இல் அண்டை நாடான ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நபராக காசிம் சுலைமானி கருதப்பட்டார்.
குண்டுவெடிப்புகளில் 103 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 141 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய அவசர சேவைகள் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களால் சுலைமானியின் கல்லறை சேதமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 படுகொலைக்கு உத்தரவிட்ட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதியாக சுலைமானியை அடையாளப்படுத்தியிருந்தார்.