ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்து, கட்டிடங்கள் தீப்பிடித்து, சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் நேற்றுமுன்தினம் ஏற்பட்டது. நோட்டோ தீபகற்பத்தில் சுமார் 3,000 மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகாப்டர் ஆய்வுகள் தீ விபத்துகள், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதத்தை அவதானித்துள்ளன.
ஜப்பானிய நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த மக்கள் தற்போது கடும் மழை மற்றும் கடும் குளிருடன் கூடிய காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று புதன்கிழமை கனமழை பெய்யும் என்றும், நிலச்சரிவு அச்சத்தை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் பலரை மீட்பதற்கான முயற்சிகள் இதனால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எனினும் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு ஜப்பான் இராணுவம் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.