பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினரை உடன் அழைத்துச் செல்ல பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
குடியேற்ற எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்தத்தில், 300,000 பேர் பிரிட்டனுக்கு வருவதைத் தடுப்பதே இந்த உத்தியின் நோக்கம் என்றும் அவர் சொன்னார். இந்தத் தடையால் இந்திய மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், பிரிட்டனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களே அதிகம்.
இந்நிலையில், இந்தக் கடும் கட்டுப்பாடுகள் குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறுகிய கால இலாபத்திற்காக வெளிநாட்டு மாணவர்கள்மீது இத்தகைய கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது நீண்டகால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ‘ஃபிரகோமன் இமிகிரேஷன் லாயர்ஸ்’ நிறுவன இயக்குநர் நவோமி கோல்டுஸ்டீன் கூறினார்.
இதனால், தங்கள் மனைவி, பிள்ளைகளோடு இருக்கும் மாணவர்கள் தங்கள் கல்விக்காக வேறு நாடுகளை நாடலாம் என்றார் அவர்.
இதேவேளை, இலங்கையில் இருந்து சென்றும் அதிகளவான மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வி கற்று வருகின்றனர். அவர்களுக்கு இந்த புதிய தடைகள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.