2023 ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. பொழுது புலர்ந்தால் புத்தாண்டை வரவேற்பதற்கு உலக நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை எண்ணற்ற நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன.
நல்ல விஷயங்கள், துயரகரமான விஷயங்கள், சாதனைங்கள், சோதனைகள் என அத்தனை நிகழ்வுகளையும் வழமை போன்றே இந்த ஆண்டும் கடந்திருக்கிறது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு கடந்து வந்த பாதையில் உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற சில முக்கிய விடயங்களை இந்த பதிவின் ஊடாக பார்க்கலாம்.
ஜனவரி
பிரபல பாடகி மாரடைப்பால் மரணம்
பிரபல அமெரிக்க பாடகி லிசா மேரி பிரெஸ்லி (Lisa Marie Presley) தமது 54 ஆவது வயதில் காலமானார். மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலே அவர் காலமானார். லிசா மேரி பிரெஸ்லி ராக் அன் ரோல் ஜாம்பவான் எல்விஸின் ஒரே மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்
தைப்பொங்கல் தினத்தன்று நேபாளத்தில் 72 உயிர்களை காவுகொண்ட விமான விபத்து கடல்கடந்த நாடுகளையும் துயரத்தில் ஆழ்த்தியது. நேபாளத்தின் பொக்காரா (Pokhara) எட்டி எயார்லைன்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போது விமானம் செட்டி பள்ளத்தாக்கில் மோதியத்தில் 5 இந்தியர்கள் உட்பட மொத்தம் 72 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மனித தவறினால் இந்த விபத்திட்டு நேர்ந்துள்ளதாக 8 மாதங்கள் கடந்து தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 83 உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலனாவர்கள் பொலிஸார் என தெரிவிக்கபப்ட்டது. உயர் பாதுகாப்பு பகுதிக்குள் எப்படி குண்டுவீச்சாளர்கள் பிரவேசித்தார்கள் என பரவலாக விமர்ச்சிக்கப்பட்டது.
பெப்ரவரி
லிபியா அருகில் அகதிகள் படகு விபத்து
லிபியா அருகே அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 73 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடையும் நோக்கில் சட்டவிரோதமாக பயணித்த மக்களே இவ்வாறு உயிரிழந்தனர்.
அமெரிக்க தாக்குதலில் ISIS தலைவர் பலி
அமெரிக்கா மற்றும் சிரிய படைகள் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் ISIS தலைவர் ஹம்சா அல் ஹோசி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நான்கு அமெரிக்க படையினர் காயமடைந்தனர்.
இத்தாலியில் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு
இத்தாலியின் தெற்கு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர். 200 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு இவ்வாறு விபத்துக்குள்ளானது.
மார்ச்
பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு தீக்கிரை
பிலிப்பைன்ஸ் தெற்கு தீவுகளுக்கு இடையேயான பயணிகள் படகு தீவிபத்துக்குள்ளானதில் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்தனர்.
வானொலி ஜாம்பவான் டக் முல்ரே காலமானார்
அவுஸ்திரேலிய வானொலி ஜாம்பவான் டக் முல்ரே தனது 71 ஆவது வயதில் காலமானார். டக் முல்ரே நாள்பட்ட நோயானால் போராடிவந்ததுடன், சிட்னி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உயிரிழந்தார்.
டொனால்ட் டிரம்புக்கு எதிராக குற்றப்பத்திரம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிராக நியூயோர்க் யூரர்கள் சபையினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆபாச பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருக்கு குற்றத்தை மறைக்க பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஏப்ரல்
பத்திரிகை அச்சுப் பதிப்பு நிறுத்தம்
1703ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்த அவுஸ்திரேலியா நாளிதழான “வியன்னா சுத்தங்” அச்சுப் பதிப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தலைநகரான வியன்னாவில் உள்ள ஃபெடரல் அசெம்பிளி பகுதியில் நாளிதழின் அச்சுப் பதிப்பைத் திட்டமிட்டு மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நடுவானில் தீப்பிடித்து எரிந்த ரஷ்ய போர் விமானம்
ரஷியாவின் MiG-31 எனும் போர் விமானம் பயிற்சியின் போது தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. முர்மான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Monchegorsk அருகே உள்ள ஏரியில் குறித்த விமானம் விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சீன வைத்தியசாலை தீக்கிரை
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விண்ணப்பத்தில் 29 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் மூவரைத் தவிர ஏனைய அனைவரும் நோயாளர்கள் என தெரியவந்தது. அத்துடன், 39 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மே
துருக்கி ஜனாதிபதித் தேர்தல்
துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் தயிப் எர்டோகன் (Tayyip Erdoğan) வெற்றியீட்டினார். முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீத வாக்குகளைப் பெறாத நிலையில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்றதன் மூலம் 2014 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் தயிப் எர்டோகனின் பதவிக்காலம் மேலும் 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது.
சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறைதண்டனை
சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதி Mauricio Funes இற்கு 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளி குழுக்களுடன் தொடர்புகளை பேணியமை மற்றும் கடமைகளிலிருந்து விலகியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கமைய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக சென்றவர்கள் கைது
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த 63 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். Cross மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தன.
சிலியில் பரவிய பறவைக் காய்ச்சல்
சிலியில் பரவிய பறவைக் காய்ச்சல் காரணமாக 9,000 கடல் உயிரினங்கள் உயிரிழந்தன. கடல் சிங்கம், பென்குயின், நீர் நாய்கள் போன்ற உயிரினங்கள் இதன்போது உயிரிழந்தன.
ஜூலை
பாகிஸ்தான் அரசியல் பேரணியில் குண்டு வெடிப்பு
பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar புறநகர் பகுதியில் மதகுரு மற்றும் அரசியல் தலைவரின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் குண்டு வெடித்தது. இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 150 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
X ஆக மாறிய டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனம் தமது சின்னத்தை மாற்றியமைத்தது. இதற்கமைய டுவிட்டர் சின்னமான நீல நிற குருவி X ஆக மாற்றப்பட்டது.
மூவாயிரம் கார்களுடன் தீப்பற்றி எரிந்த சரக்கு கப்பல்
நெதர்லாந்தின் வடக்கு கடற்பரப்பில் சுமார் மூவாயிரம் கார்களுடன் பயணித்த சரக்கு கப்பல் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 16 பேர் காயமடைந்தனர். அத்துடன், கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட மூவாயிரம் கார்களும் இருந்து நாசமாகின.
நைஜர் ஜனாதிபதி சிறைபிடிப்பு
நைஜர் ஜனாபதி முகமது பாசுமை கைது செய்து, ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த இராணுவ புரட்சிக்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ஒகஸ்ட்
உளவு பார்த்த உக்ரைன் கப்பலை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
ரஷ்யாவின் கருங்கடல் கடற்பரப்பில் உக்ரைனிய உளவு கப்பலை ரஷ்யா சுட்டுவீழ்த்தியது. ரஷ்யா எரிவாயு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளும் இடத்தை உளவு நோக்கில் இந்த கப்பல் பயணத்தால் இவ்வாறு சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
நான்கு நாட்டு தூதுவர்களை வெளியேற்றிய நைஜர்
நைஜரில் ஆட்சிக் கவிழ்பை மேற்கொண்டு இராணுவத்தினர் நாட்டை கைப்பற்றியதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியேற்றப்பட்டனர்.
உலக புகழ்பெற்ற பெண் மரணம்
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்ணும், நடிகையுமான ஆர்லீன் சோர்கின் தனது 67ஆவது வயதில் காலமானார். 13 மில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரரான இவர் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
ஜோகன்னஸ்பர்க்கில் தீபரவல்
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
செப்டெம்பர்
பிரான்ஸ் – பிஜி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம்
பிரான்ஸ் மற்றும் பிஜி இடைய பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron பசுபிக் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் இராஜினாமா
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளரான பென் வாலேஸ் (Ben Wallace) தனது பதவியை இராஜினாமா செய்தார். இதற்கமைய தனது இராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அனுப்பிவைத்தார்.
பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் 38 வயதான Claire Coutinho என்ற இந்திய வம்சாவளி பெண் இணைத்துக்கொள்ளப்பட்டார். இதன்படி, அவருக்கு எரிசக்தி பாதுகாப்பு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டது.
ஒக்டோபர்
கசகஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் தீ
கசகஸ்தானில் உள்ள இரும்புத் தொழிற்சாலை ஒன்றுக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 18 பேர் காணாமல் போயிருந்தனர்.
காசா – இஸ்ரேல் போர் ஆரம்பம்
பல்லாயிரக்கணக்கான் உயிர்களை காவுகொண்ட காசா – இஸ்ரேல் இடையான போர் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தெற்கு இஸ்ரேல் மீது ரொக்கட் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதுடன் அதிகளவிலான போராளிகள் அந்த பிரதேசத்திற்குள் ஊடுருவினர். இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஹமாஸ் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா
ஹமாஸ் குழு உட்பட மேலும் இரண்டு குழுக்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த பொருளாதார தடை ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதிகமாக அமைகின்றது.
தெற்கு சீனாவில் எட்டு வகையான வைரஸ்கள் கண்டுபிடிப்பு
தெற்கு சீனாவில் அமைந்துள்ள ஹைனானில் எட்டு வகையான வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ஹைனானில் உள்ள பூச்சிகளிடமிருந்து பெறப்பட்ட 700 இற்கும் மேற்பட்ட மாதிரிகளைக் கொண்டு இந்த வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள்
உரிய ஆவணங்கள் அற்ற குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார்.
நவம்பர்
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம்
இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு முதல் கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
நேபாளத்தில் மன்னராட்சி கோரி போராட்டம்
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பன்றிக்காய்ச்சல் திரிபினால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம்
பன்றிக்காய்ச்சல் திரிபினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்டார். குறித்த நபருடன் தொடர்புகளை கண்டறிவதற்கான முயற்சிகளை பிரித்தானிய சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்திருந்தது.
அமெரிக்க முன்னாள் செயலாளர் காலமானார்
அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் Henry Kissinger தமது 100 ஆவது வயதில் காலாமானார். ஜெர்மனியில் பிறந்த Henry Kissinger அமெரிக்காவின் Connecticut மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் காலமானார்.
டிசம்பர்
டிசம்பர் 25 முதன் முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய உக்ரைன்
உக்ரைனில் முதன் முறையாக டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்துவதில் இருந்து ரஷ்ய விலகி செயற்பட்டதை தொடர்ந்து இவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்
கொரோனா வைரஸ் தொற்றின் JN-1 திரிபு மற்றும் இன்ஃபுளுவென்சா உள்ளிட்ட சுவாச நோய்கள் அதிகரிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இந்திய பெருங்கடலில் நிர்கதிக்குள்ளான அகதிகள்
இந்திய பெருங்கடலில் படகொன்றில் பயணித்த 70 சிறுவர்கள் மற்றும் 88 பெண்கள் அடங்கலாக 185 பேர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிர்கதிக்குள்ளாகினர். இந்த நிலையில், அவர்களை அவசரமாக மீட்பதற்கு UNHCR வேண்டுகோள் விடுத்திருந்தது.
ஜெனீவா விமான நிலையத்தில் வேலை நிறுத்தம்
ஜெனிவாவில் உள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெருமளவான விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் வெடிவிபத்து
இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நிக்கல் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். அத்துடன், இந்த விபத்தில் மேலும் 39 பேர் காயமடைந்தனர்.