செங்கடலில் கொள்கலன் கப்பலில் ஏற முயன்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் “சிறிய படகுகளை” அமெரிக்க கடற்படை தாக்கி அழித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
யேமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயணித்த வணிகக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் கிளர்ச்சியாளர்கள் ஏறமுற்பட்ட சம்பவம் செங்கடல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வந்த சிறிய படகுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் முதல் செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஈரானிய ஆதரவு யேமன் கிளர்ச்சிக் குழு, காஸாவில் நடந்த போருக்குப் பதிலளிக்கும் வகையில், முக்கியமான கப்பல் பாதையின் மீதான தாக்குதல்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கப்பல்களை இலக்காகக் கொண்டதாக தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் தாக்குதலுக்கு உள்ளான வணிகக் கப்பல் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதுடன், டேனிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை அடுத்து உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான மார்ஸ்க், செங்கடல் வழியாக 48 மணி நேரம் கப்பல் பயணங்களை நிறுத்தியதாகக் கூறுகிறது.
நான்கு ஹவுதி படகுகள் யேமன் நேரப்படி 06:30 மணியளவில் ஆயுதங்கள் மற்றும் சிறிய ஆயுதங்களுடன் கொள்கலன் கப்பலுக்கு அருகில் சென்று, அதிலிருந்த குழுவினர் கப்பலில் ஏற முயன்றனர். இதனையடுத்து கப்பல் பணியாளர்கள் ஒரு பேரிடர் அழைப்பை விடுத்தனர்.
இந்நிலையில், அருகில் இருந்து யுஎஸ்எஸ் ஐசன்ஹோவர் விமானம் தாங்கி கப்பல் மற்றும் யுஎஸ்எஸ் கிரேவ்லி டிஸ்டிராயர் ஹெலிகாப்டர்கள் உதவிக்கான அழைப்பிற்கு பதிலளித்தன.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டர்கள் கிளர்ச்சியாளர்களின் நான்கு சிறிய படகுகளில் மூன்றின் மீது கடும் தாக்குதல் நடத்தி மூழ்கடித்து, அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். எனினும், நான்காவது படகு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.