ரணில் வடக்கில் நான்கு நாட்கள் தங்கியிருந்து சந்திப்புகளை நடத்த திட்டம்

வடக்கிற்கு நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழ் தரப்புக்களை ஜனாதிபதி சந்திப்பது தேர்தலுக்கான வியூகம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயம் ஜனவரி 4 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. அன்று மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

பின்னர் மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.

5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் கலந்துகொள்கிறார்.

6 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை சந்திக்கின்றார்.

அதனை தொடர்ந்து அன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஜனாதிபதி தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin