இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கூறுவதுடன், வருடத்தின் இறுதி மாதங்களில் 50 சதவீதத்தால் நுகர்வு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவிக்கிறது.
அகில இலங்கை நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் (ACFSOA) தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோவின் கூற்றுப்படி, எரிபொருளின் பயன்பாடு முன்னைய வருடங்களை விட இவ்வருடம் கணிசமாக குறைந்துள்ளது.
விடுமுறைக் காலங்களில் எரிபொருளுக்கான தேவை பாதியாகக் குறைந்துள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, நுகர்வோருக்கு கணிசமான சலுகைகளை வழங்க வேண்டும்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் (CPC) சலுகைகளை வழங்கும் கோரிக்கையை எமது சங்கம் விடுத்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மக்கள் நீண்ட தூர பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளனர்.
பெரும்பாலானோர் பொது போக்குவரத்தை நாடியுள்ளனர். பெருமளவானோர் தங்கள் வாகனங்களை அத்தியாவசிய நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். மூச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு எரிபொருள் நிரப்பும் அளவை அதன் சாரதிகள் குறைத்துள்ளனர்.
மாகாணங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது தெளிவாகத் தெரிகிறது. அதனால் எரிபொருள் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது.” எனவும் ஷெல்டன் பெர்னாண்டோ கூறினார்.
கொவிட் தொற்றும் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இலங்கை மக்கள் தேவையற்ற பயணங்கள் மற்றும் சுற்றுலாச் செல்வதை நிறுத்தியுள்ளனர். இதனால் போக்குவரத்துக்கான தேவைகள் குறைந்துள்ளதுடன், சாதாரண மக்கள் முதல் நடுத்தர மக்கள்வரை அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
பொது போக்குவரத்தக்கான தேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதால் அதிகளவான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. விரைவில் 200 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது