1994 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்சிகளின் அதிகாரத்தில் இருந்த ருவன்வெல்ல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தொகுதிக்கு பொறுப்பான மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன கூறியுள்ளதாவது,
1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ருவன்வெல்ல பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணி, பொதுஜன பெரமுன ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்தன.
அவர்களின் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐக்கிய மக்கள் சக்தி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளது. அதாவது கூட்டுறவுச் சங்கத்தின் முழு அதிகாரத்தையும் (9/9 நிர்வாகக் குழு உறுப்பினர்கள்) கைப்பற்றியுள்ளது.
பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த வெற்றியைப் பெறுவதற்குப் பல்வேறு வழிகளில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மரியாதைக்குரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், புதிய நிர்வாக சபைக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பையும் ஊழல் இன்றி நிறைவேற்றுவோம்.” என்றார்.
அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இதற்கான பிரசார நடவடிக்கைகளை கட்சிகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த தோல்வி பொதுஜன பெரமுனவுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த காலங்களில் ருவன்வெல்ல தொகுதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. அதனால் தேர்தலுக்கு முன்னதான இந்த தோல்வி மஹிந்தவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.