இன்று அதிகாலை வரையில் நிறைவடைந்த 24 மணித்தியால ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கையின் மூலம் மேலும் 1534 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கைதான சந்தேக நபர்களில் 23 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 99 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படவுள்ளனர் .
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸாரால் அமுல்படுத்தப்படும் யுக்திய நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று 24 ஆம் திகதி, நாளை 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடு தழுவிய ‘யுக்திய சுற்றிவளைப்பு’ நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் விசேட கடமைகளுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.