பாராளுமன்ற ஊழியர்களுக்கான பயணசலுகை இரத்து

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பாராளுமன்றத்தின் அதிகப்படியான செலவினங்களை மட்டுப்படுத்த திறைசேரி தீர்மானித்துள்ளது.

இதனால் லங்காம பேருந்துகளில் இலவச பயணத்திற்காக பாராளுமன்ற ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த (பஸ் பாஸ்) பயணசலுகைஅடுத்த வருடம் முதல் இரத்து செய்யப்படவுள்ளது.

பேருந்து அனுமதிப்பத்திரத்துக்காக வருடாந்தம் எட்டு கோடி ரூபாவை அரசாங்கம் சுமக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப அது கட்டுப்படியாகாது என்பதால், அந்தத் தொகையை அடுத்த கட்டத்திலிருந்து ஒதுக்க முடியாது என திறைசேரி பாராளுமன்றத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற ஊழியர்களின் போக்குவரத்துக்கு அடுத்த வருடத்திற்கு நான்கு கோடி மட்டுமே ஒதுக்க முடியும் என திறைசேரி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்காக நிதியமைச்சு இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் எட்டு கோடி ரூபாவை செலுத்தியுள்ளது.

இந்த பஸ் பாஸ் என்பது 1981 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற ஊழியர் ஆலோசனைக் குழுவின் முடிவின்படி அந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகையாகும்.

இதேவேளை, இவ்வருடத்திற்கான பஸ் பாஸ் அடுத்த மாதம் 2ம் திகதிக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் உதவி செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதனை சமர்ப்பிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற ஊழியர்களின் போக்குவரத்துத் தேவைக்காக தற்போது ஒன்பது லங்காம பேருந்துகள் இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை தொடர்ந்தும் இயக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் பின்னர் விடுமுறை நாட்களில் பணிபுரியும் பாராளுமன்ற ஊழியர்களுக்கு வருட இறுதியில் வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Recommended For You

About the Author: admin