பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட 56 இலங்கையர்களை மீட்க இலங்கை தீவிரம்

மியான்மரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்காக பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மியான்மர் உள்துறை அமைச்சர் நேற்று இணக்கம் வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக ஜனக பண்டார கூறியுள்ளார்.

மியான்மரில், தாய்லாந்து எல்லையில் உள்ள சைபர் கிரைம் பகுதியில் 56 இலங்கை இளைஞர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மியாவெட்டி நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி முற்றிலும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதால் அவர்களை விடுவிக்க இலங்கை தூதரகம் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் பல தரப்பினரையும் அந்நாட்டு இராணுவம் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இலங்கை மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளிலும் இளைஞர்கள் இணைய அடிமைகளாக இப்பகுதியில் சிக்கியுள்ளனர்.

அவர்களை மீட்க சில நாடுகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த மாதம் நான்கு இளைஞர்களும் ஒரு யுவதியும் பயங்கரவாதக் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பியிருந்தனர்.

தூதரகத்தின் நேரடி தலையீட்டால் 37 பேர் இதற்கு முன்னதாக காப்பாற்றப்பட்டதாக தூதுவர் ஜனக பண்டார கூறியுள்ளார்.

தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்ப வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியிவ் இலங்கை இளைஞர்கள், சுற்றுலா விசாக்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, இணைய அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர்.

இங்கு இவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin