ஆய்வுக்காக வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் எடுத்த இந்த கொள்கை முடிவு குறித்து வெளிநாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘யுவான் 6’ என்ற சீனக் கப்பலைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றுமொரு சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதனால் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு கப்பல்கள் இலங்கைக்கு வருவது 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் கடல் எல்லையை கடக்கும் வெளிநாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு வருகை தந்த கப்பல்களுக்கு புதிய இயக்க நடைமுறையின் வழிகாட்டுதல்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு ஆய்வுப் பணி நடந்தாலும் இலங்கையும் சம பங்காளிகளாக பங்கேற்க முடியும் என்பதால், ஒரு நாடாக தேவையான திறனைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.